ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து எடுக்கப்படும் நீரை குடிநீர்த் தேவைக்காக மட்டுமே இனி பயன்படுத்த வேண்டும் எனவும், தொழிற்சாலைகள் நீர் எடுக்க கூடாது எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திமுக வழக்கறிஞர் ஜோயல் கடந்த மார்ச் மாதம் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் துறையினர் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து 20 எம்.ஜி.டி.திட்டத்தின் மூலமாக 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் (20மில்லியன் காலன்) தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருவதாகவும், இந்த ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாதலால் அணையின் உள்ளே குடிநீர் திட்டங்கள் எதையும் துவங்கவேண்டுமெனில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டும் என்பது விதிமுறையாகும். இந்த விதிமுறையின்படி தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை 2008ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவில் அணைக்கட்டில் இருந்து குடிநீர்த் தேவைக்காக மட்டுமே தண்ணீர் எடுப்பதற்கு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. வனத்துறை அனுமதியின்றி ஆலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் ஏற்கெனவே பதில் மனு தாக்கல் செய்திருந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை “ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் எடுக்க முடியும். அனுமதியின்றி குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தனியார் ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கியது தவறு” எனக் கூறியிருந்தது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர்கள் எஸ்.பி.வாங்க்டி, ராமகிருஷ்ணன் தொழில் நுட்ப உறுப்பினர் நாகின் நந்தா ஆகியோரால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழங்கப்பட்டது. இத்தீர்ப்பில் குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் உரிய அனுமதியின்றி கூடுதலாக 0.025 ஹெக்டேர் வனத்துறை நிலத்தை பயன்படுத்தியது தவறு என்றும், குடிநீர் தேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்று நீரை வழங்கியது தவறென்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து குடிநீர்த் தேவைக்காக மட்டுமே இனி தண்ணீர் எடுக்க வேண்டும் எனவும் எந்தவித தொழிற்சாலைக்கும் இனி ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து நீர் எடுக்கக் கூடாதெனவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் ஸ்டெர்லைட், சிப்காட், தாரங்கதாரா கெமிக்கல்ஸ், தூத்துக்குடி அனல்மின் நிலையம் போன்றவை இனி தாமிரபரணி ஆற்று நீரை பயன்படுத்த முடியாத நிலை உண்டாகியுள்ளது.


