கல்குவாரி அகற்றம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கயத்தாறில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், அய்யனாரூத்து கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியால் அப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் விளைநிலங்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மானாவாரி நிலங்களை நம்பியுள்ள விவசாயிகளுக்கு இதனால் பெருத்த நஷ்டம் ஏற்படுவதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த கல்குவாரியை அகற்ற வேண்டும். கயத்தாறு – தேவர்குளம் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.
2025-2026 ஆம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டுத் தொகையை நிலுவையின்றி வழங்க வேண்டும் மற்றும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய நிலங்களைப் பாதிக்கும் காட்டுப்பன்றிகளின் அச்சுறுத்தலில் இருந்து விவசாயிகளைக் காக்க வேண்டும் மற்றும் அப்பகுதியில் அடர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத்தின் மாநிலத் தலைவர் மூவீஸ் சுந்தர் தலைமை தாங்கினார். கயத்தாறு பேரூர் திமுக செயலாளர் சுரேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் சீனிவாச ராகவன் வரவேற்புரை ஆற்றினார். மாநிலச் செயலாளர் மனோகர் சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் மாரீஸ்வரன், மாவட்டத் தலைவர் பெரியசாமி, ஒன்றியச் செயலாளர் அப்துல் ரகுமான், நெல்லை மாவட்ட அவைத் தலைவர் கிருஷ்ணசாமி பாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் சௌந்தரராஜன், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், தமிழ்ப் புலிகள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் வீரபெருமாள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.


