தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, மாநகராட்சிக்குச் சொந்தமான ரோச் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள “அன்னை பொருட்காட்சி” திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டுத் திருவிழா கடந்த ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ரோச் பூங்காவில் அன்னை பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பொருட்காட்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு நாடா வெட்டி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். பொருட்காட்சி அலுவலகத்தைப் பனிமய அன்னை பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான ஜான் செல்வம் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் மாமன்ற உறுப்பினர் ஜெ. ரிக்டா ஆர்தர் மச்சாது, பாண்டியாபதி தலைவர் இன்னாசி, செயலாளர் அந்தோணிசாமி, அன்னை பொருட்காட்சியின் தலைவர் ஆர்தர் மச்சாது, செயலாளர் பெப்பின் மிசியர் மற்றும் முக்கியப் பிரமுகர்களான ஹெர்மன், பெப்பீரீஸ், ராபர்ட், குயிக்கட், நியூமன், ஜெனிபர், சுகிலன் உட்பட ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இப்பொருட்காட்சி வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. பொதுமக்களுக்கு நுழைவுக் கட்டணம் எதுவுமின்றி இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


