Theatre Artist

நாடகத்துறை

நாடகத்துறையில் சிறு வயதில் இருந்தே இவருக்கு ஆர்வம் அதிகம். இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே முத்தாலங்குறிச்சி அந்தோணியார் ஆலயத்திடலில் இவர் நடித்த நாடகம் அரேங்கேறியது. முதல் நாடகத்தில் ஒரு வார்த்தை வசனம் கூட பேச வெட்கப்பட்டு இடையிலேயே மேடையை விட்டு இறங்கியவர். அதனால் ஆசிரியையிடம் குட்டுப் பட்டார். இதன் பிறகு எப்படியாவது நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அகில இந்திய வானொலி நிலையத்தில் நடந்த நாடக நடிகர் தேர்வுக்கு சென்றார். அங்கேயும் உச்சரிப்பு சரியில்லை என்று நிராகரிக்கப்பட்டார். அப்போது தான் நாமே நாடகம் எழுதினால் என்ன என்று இவருக்கு தோன்றியது. எனவே பல நாடகங்கள் எழுதினார். ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஆறாம்பண்ணை, வல்லக்குளம், கிளாக்குளம், வெட்டிக்குளம், புதுக்குளம் கிராமங்களில் இந்த நாடகங்கள் அரங்கேறியது.

வசந்த் டிவியில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மண்ணின் பெருமை பேசும் ‘‘நெல்லை மண் பேசும் சரித்திரம்’ என்னும் தொடரில் 75 வாரம் பங்காற்றினார். பின்னர் அந்த அனுபவம் எல்லாவற்றையும் தொகுத்து ‘‘தென் பாண்டிச் சீமையிலே பாகம் &1, தென்பாண்டிச்சீமையிலே பாகம் &2’’ ஆகிய 1,000 பக்கங்கள் கொண்ட 2 நூல்களை எழுதினார். இதில் இரண்டாவது நூல் 22.06.2013 அன்று நெல்லை கலெக்டர் சத்யமூர்த்தி தலைமையில் நெல்லை புத்தக கண்காட்சியில் வெளியானது. முதல் நூல் உலக அளவில் நடந்த சிறந்த நூல்களுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்றது.

ஜி தமிழ் டிவியில் “நம்பினால் நம்புங்கள்” தொடரில் பணிபுரிந்து வருகிறார். எழுத்து துறையில் 30ஆம் ஆண்டை இந்த ஆண்டு கடக்கிறார். இந்த ஆண்டு இவருக்கு 50 வயது. எனவே, இந்த ஆண்டு தனது 50வது நூலை வெளியிட திட்டமிட்டுளளார். விகடன், சூரியன், சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகம், காவ்யா உள்பட முன்னணி பதிப்பகங்களில் இருந்து இவரது நூல் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய ‘தலைத் தாமிரபரணி’ என்னும் 950பக்க நூல் தாமிரபரணி வரலாற்றில் மிகப்பெரிய எளிய தமிழ் நூல்.

சினிமாத்துறை

கிராமங்களில் நாடகம் நடிக்கும்போதே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்தது. நடிகரும், செய்துங்கநல்லூரை சேர்ந்தவருமான டாக்டர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி இவருடைய நாவலை திரைப்படமாக்க முயற்சி செய்து வருகிறார். இதற்கு முன்பாக இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

நடிகரும் இயக்குனருமான திரு.சேரன் அவர்கள் தயாரித்து, நடிகை திருமதி ரோகிணி அவர்கள் இயக்கிய “அப்பாவின் மீசை” என்ற திரைப்படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமானார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ராட்டினம் பிக்சர்ஸ் தயாரிப்பில் முத்துநகர் இயக்குனர் திரு.கே.எஸ். தங்கசாமி அவர்கள் இயக்கத்தில் “எட்டுத்திக்கும் மதயானை” படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் “நெல்லை சீமையிது” என்ற பாடலில் திருநெல்வேலியின் பெருமையினை பத்தமடை பாயி.... என தொடங்கி...இன்னும் நிறைய விஷயம் சொல்லலே..” என்ற 12 வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளார். இந்தப் படம் திரைக்கு வந்து இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் இவரது நண்பர் தம்பி இப்ராகீம் அவர்கள் இயக்கிய “புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்” என்னும் திரைப்படத்தில் பஸ் கண்டக்டராக நடித்துள்ளார். அந்த படமும் சிறப்பாக வெளி வந்து வெற்றி பெற்றது.

இவரது இயக்கத்தில் “பொருநை சுடர்” என்ற ஆவணப் படம் வெளிவந்துள்ளது. கௌசானல் அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இந்த ஆவணப் படத்தை திருஇருதய சகோதரர்கள் தயாரித்தனர்.

எதிர்காலத்தில் நெல்லை தூத்துக்குடி மாவட்ட வரலாறுகளை ஒன்று விடாமல் முழுமையாக தொகுக்க வேண்டும் என்பதே இவரது ஆசை.