தூத்துக்குடியில் விதிகளுக்குப் புறம்பாக நடத்தப்பட்டதாக வி.வி. சிமெண்ட் ஆலை தாெடர்பான கருத்து கேட்புக் கூட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா, தெற்கு வீரபாண்டியபுரத்தில் அமையவுள்ள வி.வி. குழுமத்தின் அரிமா சிமெண்ட் ஆலைக்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் தூத்துக்குடி 3-வது மைல் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இருப்பினும், இக்கூட்டம் விதிகளுக்குப் புறம்பாக நடத்தப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம் நடத்த, அப்பகுதியில் அடிப்படை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். இந்திய அரசின் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் 2022-ஆம் ஆண்டு ஆணையின்படி, இந்த ஆய்வுத் தரவுகள் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
இத்திட்டத்திற்கான ஆய்வறிக்கை கடந்த 30.06.2023 அன்று தயார் செய்யப்பட்டு, அதன் 3 ஆண்டு கால அவகாசம் முடிவடைந்துள்ளது. காலாவதியான ஆய்வுத் தரவுகளை வைத்துக்கொண்டு ஒரு மாதம் கழித்து தற்போது இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது சட்டத்திற்குப் புறம்பானது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாகக் கடந்த மாதமே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளரிடம் மனு அளித்து, புதியதாக 3 மாத காலம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கைத் தயார் செய்த பிறகே கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனால், மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு, எச்சரிக்கையையும் மீறி இன்றைக்குக் கூட்டத்தை நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்றைய கூட்டத்திலும் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள் இக்கோரிக்கையை நேரில் வலியுறுத்தி மனு அளித்த போதிலும் கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது.
பொதுவாகக் கருத்து கேட்புக் கூட்டம் ஆலை அமையவுள்ள கிராமத்தின் அருகிலேயே நடத்தப்பட வேண்டும். ஆனால், தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூட்டம் நடத்தப்பட்டதால், அப்பகுதி மக்களுக்குக் கூட்டம் நடப்பதே தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது.
காலாவதியான ஆவணங்களை வைத்து நடத்தப்பட்ட இன்றைய கருத்து கேட்புக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆலை அமைய உள்ள தெற்கு வீரபாண்டியபுரம் கிராமப் பகுதியிலேயே அனைத்துப் பொதுமக்களும் பங்கேற்கும் வகையில் புதிய கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


