வல்லநாடு அருகே சேதுராமலிங்கபுரத்தில் பழுதான டிரான்ஸ்பார்மரால் இந்த போகம் விளைச்சல் கேள்வி குறியாகி விட்டது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் 7வது அணைகட்டு மருதூர். மருதூர் கீழக்காலின் கரையில் வடவல்லநாடு பஞ்சாயத்துக்கு பாத்தியப்பட்ட விளைநிலங்கள் உள்ளன. இந்த பகுதி மேடான பகுதியாக இருப்பதால் தாமிரபரணி பாசனம் மூலம் பயன் கிட்டாது. ஆனாலும் தாமிரபரணி நிலத்தடி நீர் கிணற்று பாசனம் மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது. இந்த பகுதியில் சுமார் 50 பம்பு செட் மூலமாக கிணற்று பாசனம் நடைபெறுகிறது. இந்த பாசனத்தினை அருகில் உள்ள சேதுராமலிங்கபுரம், நாணல்காட்டான் குளம், உள்பட பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் இந்த ஆண்டு மழை செழிப்பின் காரணமாக நிலத்தடி நீர் நன்றாக உள்ள காரணத்தினால் விவாயத்துக்கு விவசாயிகள் தாயராகி வருகிறார்கள். ஆனால் இங்குள்ள இரண்டு டிரான்ஸ்பார்மர் பழுதாகி உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் முழுவதுமாகவே மின் தடை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வருடம் விவசாயத்தினை துவங்க இப்பகுதி விவசாயிகள் தயங்கி வருகிறார்கள்.
இதுகுறித்து சேதுராமலிங்கபுரத்தினை சேர்ந்த சௌந்திரபாண்டியன் கூறும் போது, எங்கள் பகுதி வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் கூட தாமிரபரணி பாசனம் மருதூர் கீழக்கால்வாயின் கரையில் இருப்பதால் நிலத்தடி நீர் கொண்டு பாசனத்தினை சிறப்பாக செய்து வந்தோம். எங்கள் விளைநிலத்தில் சுமார் 50 க்கு மேற்பட்ட பம்பு செட்டுகள் உள்ளன. இது முழுவதுமே அரசு வழங்கும் மின்சாரத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த பகுதியில் உள்ள இரண்டு டிரான்ஸ்பார்மர் மிக மோசமாக பாராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதை ஒழுங்காக பாராமரிக்காத காரணத்தினால் அடிககடி மின் தட்டுபாடு ஏற்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் எங்கள் மோட்டார் பழுதாகி விடுகிறது. தொடர்ந்து மின்தடை ஏற்படுவதால் சாகுபடியை துவங்க விவசாயிகள் மிக யோசிகக வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனடியாக இந்த டிரான்ஸ்பார்மரை சீர் செய்து எங்கள் விவசாயத்துக்கு தேவையான மின்சாரத்தினை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
விவசாயம் செய்ய வாய்ப்பு கிடைப்பது அரிது. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் கூட இதுபோலவே மின்சாரம் இன்றி அடிக்கடி விவசாயம் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


