முதுமை ஒரு வரம் – நூல் விமர்சனம்
நூல்: முதுமை ஒரு வரம்
நூலாசிரியர்: பா. மணிகண்டன்
விமர்சனம்: முத்தாலங்குறிச்சி காமராசு
பதிப்பகம்: அகிலேஷ்
நூல் கிடைக்குமிடம்: 94430-86974
விலை: ₹120/-
நூலாசிரியர் பா. மணிகண்டன் அவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்ததே ஒரு பரபரப்பான சூழலில்தான். என்னுடைய ‘சித்தர்களின் சொர்க்கபுரி: பொதிகை மலை’ நூல் 25 படிகள் வேண்டுமென அவர் என்னை அணுகிய காலம் அது. நூலைக் கொடுத்துவிட்டு அதற்கான தொகையை உடனே பெற்றுக்கொண்டேன். அப்போது ஒரு எழுத்தாளராக இருப்பதைவிட, ஒரு பதிப்பாளராகவே அவரிடம் நடந்துகொண்டேன் என்றுதான் நினைக்கிறேன்.
அதன் பிறகு நெல்லையில் நடக்கும் ஒவ்வொரு இலக்கியக் கூட்டத்திலும் அவரைக் கவனித்திருக்கிறேன். நான் மேடையில் பேசும்போது, அவர் எங்கிருந்தாலும் மேடைக்கு அருகில் வந்து நின்றபடியே என் பேச்சை ரசிப்பார். அவர்தான் இந்த நூலின் ஆசிரியர் பா. மணிகண்டன். இவர் இளையரசனேந்தல் ஜமீன்தாரின் கர்ணம் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பிற்காலத்தில் அறிந்துகொண்டேன். அதுமட்டுமல்லாமல், 1989-ல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெற்று, தமிழக அரசுப் பணியில் சேர்ந்த முதல் ‘ஆண் செவிலியர்’ இவர்தான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் செவிலியக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் எனக்குத் தெரிந்தவர்கள் சிகிச்சைக்குச் சேர்ந்தால், இவரிடம்தான் தகவல் சொல்வேன். உடனே அங்கு சென்று நோயாளிக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருவார். காலப்போக்கில் எங்களது உறவு நட்பாகவும், சிறந்த பாதுகாப்பாகவும் தொடர்ந்தது.
நான் இதய நோயால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையில் பாளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, மருத்துவமனை முதல்வரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அப்போதுதான் மருத்துவமனை முதல்வரின் பூர்வீகம் முத்தாலங்குறிச்சி என்பதையே நான் அறிந்துகொண்டேன். நான் எழுதிய ‘கரிசல்காட்டு ஜமீன்தார்கள்’ நூலைப் பற்றி ஆர்வத்தோடு என்னிடம் பேசினார். அதில் நான் குறிப்பிட்டிருந்த ‘பேப்பர் சுவாமிகளுக்கும்’ அவர் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்பைப் பகிர்ந்துகொண்டார்.
காலம் நகர்ந்தது. “2026 புத்தகக் கண்காட்சியில் நான் ஒரு புத்தகம் வெளியிடுகிறேன், மேடைக்கு வாருங்கள்” என எனக்கு அழைப்பு விடுத்தார். குறித்த நேரத்தில் நூல் வெளியீட்டு விழா தொடங்கியது. நெல்லை இலக்கியவாதிகள் இவர் மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள் என்பதால், மேடையில் ஒரு பெரும் இலக்கியக் கூட்டமே கூடியிருந்தது. 30 நிமிட விழாவில் அவரது ‘முதுமை ஒரு வரம்’ நூல் பிரம்மாண்டமாக வெளியானது. நான் சிறிது தாமதமாகச் சென்றதால் மேடை ஏற இயலவில்லை.
அதன்பிறகு, சித்திரை புத்தாண்டு அன்று இவரை ‘தோரணமலையான் விருது’க்கு பரிந்துரை செய்தேன். அதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. தோரணமலை என்பது தேரையர் வாழ்ந்த மலை. தேரையர், அகத்திய மாமுனிவருக்கு உதவியாக இருந்த உலகின் முதல் செவிலியர் என்று கருதப்படுபவர்; கபால அறுவை சிகிச்சையை முதன்முதலில் செய்தவர். அத்தகைய புனிதமான இடத்தில், தமிழகத்தின் முதல் ஆண் செவிலியருக்கு விருது வழங்குவதுதான் சிறப்பு என எண்ணினேன். தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் அவர்கள் இதற்கு இசைவு தெரிவித்தார். 18 சித்தர்களின் நினைவாக 18 பேருக்கு வழங்கப்பட்ட விருதில் இவருக்கும் விருது வழங்கப்பட்டது.
சமீபத்தில் எனது சீடர் ஒருவர் சிறுநீரகக் கல் வலியால் அவதிப்பட்டு பாளை மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, அவரிடம் மணிகண்டன் ஐயா இந்த ‘முதுமை ஒரு வரம்’ நூலைக் கொடுத்திருக்கிறார். அதைப் பெற்றுக்கொண்ட நான், அவசர அவசரமாக வாசிக்கத் தொடங்கினேன்.
நூலின் அட்டைப்படத்தை நெல்லை வள்ளிநாயகம் அவர்கள், மணிகண்டனின் தாயாரைப் போன்றே தத்ரூபமாக வரைந்திருந்தார். நூலைத் தனது தாயாருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருந்தார். “தமிழை வாழ்வியலோடு சொல்லிக்கொடுத்த அம்மாவுக்கு” என அவர் நூலைத் தொடங்கும் விதமே வித்தியாசமாக இருந்தது. நெல்லையின் இலக்கிய மூவேந்தர்களான வண்ணதாசன் ஐயா, கிருஷி ஐயா, மருத்துவர் இராமானுஜம் ஐயா ஆகியோரின் வாழ்த்துரைகளோடு நூல் பயணிக்கிறது. “தொடராக எழுதியிருப்பீர்கள் போல, எளிய நடை வாசிப்போடு ஒன்ற வைக்கிறது” என வண்ணதாசன் ஐயா பாராட்டியிருந்தார்.
“இந்த நூலில் ஆங்காங்கே பொருத்தமாகச் சங்க இலக்கியப் பாடல்களும், திரைப்படப் பாடல்களும் வருகின்றன. இது மணிகண்டனுக்குத் தமிழ் மீதுள்ள ஆர்வத்தையும், சொல்லாட்சியையும் காட்டுகிறது” என மருத்துவர் இராமானுஜம் ஐயா குறிப்பிட்டிருந்தார். எழுத்தாளர் கிருஷி ஐயா தனது அணிந்துரையில், “இவர் பெற்றிருக்கும் அனுபவங்களை எல்லாம் சிறுகதையாகவோ, நாவலாகவோ எழுதலாம்” என அடுத்த கட்டத்திற்கு அச்சாரமிட்டுள்ளார்.
தமது ‘என்னுரையில்’ எழுத்தாளர் நாறும்பூ நாதருக்கு நன்றி தெரிவித்திருந்தார் நூலாசிரியர். நெல்லையில் வளரும் பல எழுத்தாளர்களைக் கைபிடித்து வழிநடத்துபவர் நாறும்பூ நாதர். அவரை நினைவுகூர்ந்த ஆசிரியருக்கு நன்றி கூறிவிட்டு நூலுக்குள் நுழைவோம்.
இதில் மொத்தம் 19 கட்டுரைகள் உள்ளன. முதியோர் உளவியல், நிதி மேலாண்மை, காப்பீடு, முதியோர் நலம், தூக்கம், முதியோர் இல்லம், “வயோதிகம் வரமா?”, “மரண பயம்” என ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு செய்தியைத் தாங்கி நிற்கிறது.
‘மரண பயம்’ கட்டுரையில்:
“இறப்பு என்பது புதிதல்ல…
ஓர் இலை உதிர்வதற்கு மேல் எதுவும் அதில் இல்லை”
என ஒரு வரியில் கூறியிருப்பது ரசிக்க வைக்கிறது; அதேசமயம் மனதை ஏதோ செய்கிறது. “மனதில் தெளிவு இருந்தால் வாழ்வில் ஒளி இருக்கும்” என அவர் முடித்திருப்பார். முதியோர்கள் இத்தகைய மனத்தெளிவோடு இருக்க வேண்டும். அதற்கு அவர்களுடன் இருப்பவர்கள் நம்பிக்கையளிக்க வேண்டும்.
‘வயோதிகம் வரமே’ என்ற தலைப்பில் முதியோர்களுக்காக அவர் வழங்கியிருக்கும் ஆலோசனைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. முதியோர்கள் செய்யக் கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை எனப் பட்டியலிட்டுள்ளார்.
உண்மைதான், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்தல் கூடாது; குறிப்பிட்ட வயதிற்குப் பின் கார் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்; கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் கடினமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்; இரவு தாமதமாக உண்ணக் கூடாது; சுய மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது; நோய் பற்றிய கற்பனைகள் கூடாது; உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனச் செய்யக் கூடாதவை பற்றித் தெளிவாக எழுதியுள்ளார்.
செய்ய வேண்டியவையாக… தினமும் நடைப்பயிற்சி, மேற்கத்தியக் கழிவறையைப் (Western Toilet) பயன்படுத்துதல், உறுதியான மெத்தையில் தூங்குவது, உறுதியான நாற்காலியில் அமர்வது போன்றவற்றைச் சொல்லியுள்ளார். நடக்கும்போது எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்; படிகளுக்குப் பதில் சாய்வுப் பாதைகளைப் (Ramp) பயன்படுத்த வேண்டும்; அத்தியாவசிய மருந்துகளை எப்போதும் வைத்திருக்க வேண்டும்; சரிவிகித உணவு மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகளைச் சீரான இடைவெளியில் உட்கொள்ள வேண்டும்; அனைவருடனும் நட்புடன் இருக்க வேண்டும்; விருப்பம் இல்லையென்றாலும் மற்றவர்களுடன் தொடர்பைப் பேண வேண்டும்; குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் – இதையெல்லாம் கடைப்பிடித்தால் வயோதிகம் என்பது ஒரு வரமே!
செவிலியராகப் பணியாற்றி வருவதால், பல முதியவர்களைச் சந்தித்த அனுபவமே இந்த நூலில் பிரதிபலிக்கிறது. வருங்காலத்தில் கிருஷி ஐயா கூறியபடி, தமது அனுபவங்களைக் கொண்டு மணிகண்டன் ஐயா பல நாவல்களை எழுத வேண்டும். அதற்குத் தேவையான வளம் உங்களிடம் உள்ளது. வாழ்த்துகள் மணிகண்டன் ஐயா!
வாழ்க வளமுடன்!
– முத்தாலங்குறிச்சி காமராசு


