நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கும் தாமிரபரணி நதியை பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் இருகரைகளிலும் மண்டிக்கிடக்கும் முள்செடிகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பு, ‘கோமாட்சு’ (ரிஷீனீணீtsu) நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் வழங்கப்பட்ட வாடகையில்லா இயந்திரத்தைக் கொண்டு இப் பணியைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருங்கிணைப் பாளராகப் பணியாற்றி, நதியை மீட்டெடுக்கும் முயற்சியில் பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைத்து வருகிறோம்.
பணி துவக்கமும் சவால்களும்
2023 டிசம்பர் மாதத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பாதிப்பு, ஆற்றின் கரைகளில் வளர்ந்திருந்த அடர்ந்த முள்செடிகளே வெள்ளம் ஊருக்குள் புக முக்கிய காரணம் என்பதை உணர்த்தியது. இதை யடுத்து, 2024 ஜூலை 6-ம் தேதி மருதூர் அணையில் கனிமொழி எம்.பி அவர்களால் முள்செடி அகற்றும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் டீசல் மற்றும் ஓட்டுநர் ஊதியத்திற்கான நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அப்போதைய நீர்வளத்துறை எஸ்டிஓ ஆதிமூலம் அவர்களின் முயற்சியால் தனியார் நிதி பெற்று பணிகள் நடந்தன. மருதூர் அணை முதல் கொங்கராயகுறிச்சி வரை பணிகள் முடிந்த நிலையில், நிதிப் பற்றாக்குறையால் தற்காலிகமாகப் பணிகள் நிறுத்தப்பட்டு, இயந்திரம் எனது கிராமமான முத்தாலங்குறிச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் மகத்தான ஆதரவு
இந்த இக்கட்டான சூழலில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அவர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கினேன். அவர் உடனடியாக மாவட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மீண்டும் தொடங்க வழிவகை செய்தார். அதன்படி, ஓட்டுநர் சம்பளம் மற்றும் டீசல் செலவை மாவட்ட நிர்வாகமும், ஓட்டுநருக்கான உணவு, தங்குமிடம் மற்றும் இதரப் பொறுப்புகளை அந்தந்த பகுதி ஊராட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.
முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை ஆகிய பகுதிகளில் பணிகள் மிகச்சிறப்பாக நடந்தன. ஆறாம்பண்ணையில் பயிற்சி ஆட்சியர் சத்யா அவர்கள் நேரில் வந்து ஊக்கமளித்தார். முத்தாலங் குறிச்சியில் புதர் மண்டிக்கிடந்த இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு, நதி அதன் பழைய பொலிவுடன் காட்சியளிக்கத் தொடங்கியது.
மாதிரி தாமிரபரணி திட்டம்
ஸ்ரீவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரையிலான பகுதியை’மாதிரி தாமிரபரணி’ யாக மாற்ற மாவட்ட ஆட்சியர் திட்டமிட்டார். ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனம் இப்பணியில் கைகோர்த்தன. இடையில் வனத்துறையினருடன் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடுகள் ஆட்சியரின் தலையீட்டால் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு, சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிற்கு முள்செடிகள் முழுமையாக அகற்றப்பட்டன.
மக்கள் பங்களிப்பும் சுற்றுச்சூழல் விழாக்களும்
இப்பணி வெறும் முள்செடி அகற்றுவதோடு நின்றுவிடாமல், பசுமைப் புரட்சியாகவும் உருவெடுத்தது:
பனை விதைகள்: சுமார் 2.50 லட்சம் பனை விதைகள் ஆற்றின் கரைகளில் விதைக்கப்பட்டுள்ளன.
விதைப்பந்துகள்: பள்ளி மாணவர்கள் மூலம் 1 லட்சம் விதைப்பந்துகள் தூவப்பட்டுள்ளன.
மரக்கன்றுகள்: ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
குமரகுருபரர் தொடக்கப்பள்ளி மற்றும் ஜோஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இந்த விதைப்பந்து வீசும் திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
தூர்வாரும் பணிகள்: ஆதிச்ச நல்லூர் மற்றும் கருங்குளம்
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதிச்ச நல்லூர் தளம் மற்றும் வெள்ளூர் வடிகால் பகுதிகளில் மண்டிக்கிடந்த முட்செடிகள் அகற்றப்பட்டு, வடிகால் சீரமைக்கப்பட்டது. அதேபோல், கருங்குளம் ‘சம்பன் குளம்’ அமலைச் செடிகளால் தூர்ந்து போயிருந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ராட்சத இயந்திரங்கள் மூலம் தூர்வாரப் பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகளும் பக்தர்களும் பெரும் பயனடைந்தனர்.
அங்கீகாரமும் விருதுகளும்
சுற்றுச்சூழல் மற்றும் நதி பாதுகாப்பில் காட்டிய அர்ப்பணிப்பிற்காகத் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரண்டு முக்கிய விருதுகள் எனக்கு வழங்கப்பட்டன:
சமூக பாதுகாப்பு தலைமைத்துவ விருது (2025-&26): வனவிலங்கு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டது
பசுமை முதன்மையாளர் விருது (2025): சுற்றுச்சூழல் பாதுகாப் பிற்கான சிறந்த பங்களிப் பிற்காக மாவட்ட ஆட்சியரால் வழங்கப் பட்டது
இந்த விருதுகளை எனது குழுவினருக்கும், என்னுடன் உழைத்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
தற்போது ஆறாம் கட்டமாக ஆழ்வார்திருநகரி முதல் ஏரல் வரை பணிகள் தொடர்ந்து வருகின்றன. 2025-ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, இந்தத் தூய்மைப் பணிகளின் காரணமாகப் பெரிய அளவில் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது எங்களது முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
இந்த நதி மீட்புப் பணியில் உறுதுணையாக இருக்கும் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா, ‘கோமாட்சு’ எக்ஸ்னோரா, கிராம உதயம் தொண்டு நிறுவனம்,ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கங்கள், அந்தந்த பகுதி ஊராட்சித் தலைவர்கள், குமரகுருபரர் தொடக்கப்பள்ளி.ஜோஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாமிரபரணியைப் பாதுகாக்கும் எங்களது பயணம் நதி முழுமையாகத் தூய்மையடையும் வரை தொடரும்.
( நதி வற்றாமல் ஓடும்)


