தாமிரபரணி கரையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை சேர்ந்த வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி கர்ப்பிணி யாக இருந்தார். தலை பிரசவம் பார்க்க தாய் வீட்டில் போதிய வசதியில்லை. இதனால் அந்தப் பெண் மனமுடைந்து போய் விட்டாள். தாய் வீட்டில் பிரசவம் பார்க்க வழியில்லையே என்று கணவரும் மனைவியைத் திட்டிக் கொண்டே இருந்தார். இதனால் அந்தபெண்ணுக்கு வருத்தம்.
கோபம் அடைந்த அந்த கர்ப்பிணிப் பெண் தாமிர பரணிக்கரை மணலில் மனம்போன போக்கில் நடக்க ஆரம்பித்தார்.
அவள் முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்று மணலில் நடந்து வரும் போது மதிய வெயில் தாக்கியது. இதனால் நாக்கு வறண்டு தாகம் எடுத்தது. அவள் மயக்க நிலைக்குச் சென்றாள்.
நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண்ணுக்கு பிரசவ வலியும் ஏற்பட்டது. “அம்மா என்னைக் காப்பாற்று” என்று அலறினாள். மயங்கி சாய்ந்தாள். ஒரு வயதான பெண்மணி அந்த பெண்ணை தாங்கினார். ஆற்றங்கரையில் இருந்த ஒரு குடிசைக்குத் தூக்கி சென்று அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவளுக்குத் தேவையான அனைத்து உதவியையும் வயதான பெண்மணி, தாய் ஸ்தானத்தில் அமர்ந்து செய்தார்.
கர்ப்பிணி மனைவியை காண வில்லையே என கவலையடைந்தார் வணிகர். பல இடங்களில் மனைவியைத் தேடி அலைந்தார். தாமிரபரணி கரையில் தேடி வந்தார். முத்தாலங்குறிச்சி ஆற்றில் குளித்து விட்டு அங்குள்ளவர்களிடம் விசாரித்தார். அங்கு வந்த சிறுமி “நீ தேடி வந்தது.. அதோ அந்த குடிலில் இருக்கிறது போய் பார்”. என்று கூறினாள்.
மனதில் சந்தோஷம் அடைந்த வணிகர் அந்த குடிலை நோக்கி ஓடினார். அங்கே அழகான குழந்தையுடன் தன் மனைவியைக்கண்டார். சந்தோஷம் பொங்கியது. குழந்தையை அப்படியே தூக்கி உச்சி முகர்ந்தார். தன்னை பிரிந்து வந்த மனைவியை கண்ட சந்தோஷத்தில் அவளிடம் அன்பொழுக நடந்து கொண்டார். கண்ணீர் மல்க நின்ற மனைவியிடம் “உன்னைக் காப்பாற்றியது யார்?” என்று கேட்டார்.
“நான் மயங்கிய வேளையில் என்னை அரவணைத்து பிடித்தவள் ஒரு வயதான பெண்மணி. நான் வயிற்றுவலியால் துடித்த போது என்னை தாய் போல் அணைத்துக் கொண்டாள். எனக்கு குழந்தை பிறக்கும் போது ஏற்பட்ட வலியை போக்கியவளும் அவளே. என் கையில் ஆண் பிள்ளையை தந்து விட்டு. என் முகமலர்ச்சியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தவளும் அவளே. ஆகவே அந்த அன்புத்தாயை நீங்கள் பார்க்க வேண்டும்” என்றாள்.
மனைவி சொல்வது கணவனுக்கு சரி என்றே பட்டது. எனவே அந்த மருத்துவச்சி தாயை பார்க்க ஆவலாக காத்து கிடந்தனர். நிமிடங்கள், மணிக்கணக்கை காட்டியது. கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் , அவனது பணியை முடித்துக்கொண்டு மேற்கே சங்கமம் ஆனான்.
இருவரும் மருத்துவம் பார்த்த மருத்துவச்சி வந்து விட்டால், அவளிடம் சொல்லி விட்டு குழந்தையோடு கிளம்பி விடலாம் எனக்காத்து இருந்தனர்.
இரவும் வந்தது. ஆனால் யாரும் வரவில்லை. காத்து இருந்து காத்திருந்து அயர்ந்து போன அவர்கள் குழந்தையுடன் தூங்கி விட்டனர். அப்போது வணிகருக்கு கனவு வந்தது. அதில் சிரித்த முகத்துடன் செவ்வாடை கட்டி ஒரு பெண் வந்தாள். அவள் வணிகரிடம் பேசினார். “நான் தான் குணவதியம்மன். உன் மனைவிக்கு வயதான பெண்ணாக வந்து பேறுகாலம் பார்த்தது நான்தான். அது மட்டுமல்லாமல் சிறுமியாக வந்து உன்னை உன் மனைவி குழந்தையைப் பார்க்க வைத்ததும் நான்தான். நான் இந்த முத்தாலங்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு கோயில் கட்டு” என்று கூறி மறைந்தார்.
விழித்து எழுந்து பார்த்தார் வணிகர்.
தன் மனைவிக்கு நல்லபடியாக பேறுகாலம் பார்த்தவள் குணவதியம்மனா என்று வியந்தார். பின் சந்தோஷம் அடைந்து அம்மனை நோக்கி கண்ணீர் மல்க வணங்கி நின்றார்.
மறுநாள் ஊரில் வந்து விவரம் சொன்னார். தாயாக வந்து பேறுகாலம் பார்த்து, சிறுமியாக வந்து அடையாளம் காட்டி.. நல்லஆண் பிள்ளை பெற காரணமானவள் அல்லவா அவள். ஆகவே அவளுக்கு நல்ல பிள்ளை பெற்ற குணவதியம்மன் என்று பெயர் வைத்தனர் ஊர் மக்கள். நல்ல ஆண் பிள்ளை பெற்றெடுக்க காரணமாக இருந்த தாயை நல்லாண்பிள்ளை பெற்றவள் என்று அழைத்து மக்கள் மகிழ்ந்தனர். குணவதியம்மன் பெண்ணுக்கு பேறுகாலம் பார்த்த குடிலில் வணிகர் தனது சொந்த செலவில் கோயிலைக்கட்டினார்.
முத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் தருபவளாக வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார் குணவதியம்மன். இந்தியாவிலேயே இரண்டு இடத்தில் தான் ஆறுகள் வடக்கில் இருந்து தெற்காக பாய்கிறது. ஒன்று கங்கை மற்றொன்று தாமிரபரணி.
இந்த தாமிரபரணி ஆற்றில் நல்லபிள்ளை பெற்ற குணவதியம்மனின் கால் பாதத்தினை தொட்டு வணங்கி விட்டு தாமிரபரணி தாய் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்கிறாள். தாமிரபரணி ஆற்றில் வடமுக ஆற்றில் அம்மன் பாதத்தினை தொடும் அமைப்பில் இந்த கோயில் மட்டுமே அமைந்து இருப்பது மிகச்சிறப்பாகும். எனவே கேட்ட வரம் தரும் தயாக குணவதி போற்றப்படுகிறாள்.
(நதி வற்றாமல் ஓடும்)


