தூத்துக்குடி தொகுதியில் 7 லட்சத்து 373 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 24 ஆயிரத்து 912 பெண் வாக்காளர்கள், 116 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 25 ஆயிரத்து 401 வாக்காளர்கள் உள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் 1,595 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் மிகவும் பதற்றமான 3 வாக்குச்சாவடிகளும், பதற்றமான 238 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 694 வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்றத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் காலை 7 மணி முதலே தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்றத்தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் போட்டியிடும் புவனேஷ்வரன் தனது சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேல ஆழ்வார்தோப்பு இந்து நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்த காலை 7.30 மணி அளவில் வருகை தந்தார். ஆனால், முதல் வாக்கு செலுத்தும் போதே வாக்கு இயந்திரம் பழுதடைந்தது. இதனால் வாக்காளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போது வந்த அமமுக வேட்பாளர் புவனேஷ்வரனும் நீண்ட நேரம் காத்திருந்தார். அதன்பின்னர் சுமார் 1 மணி நேரம் காத்திருந்தனர். அதன்பின்னர் வாக்கு இயந்திரம் பழுது சரி செய்யப்பட்டது. அதன்பின்னர் வேட்பாளர் புவனேஷ்வரன் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்காளர்கள் அதிகாலை முதலே மிகவும் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தூத்துக்குடி பாராளுமன்றத்தொகுதியைப் பொறுத்தவரை நான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அவர் பேசினார்.
அதே போல் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் ஏரல் அருகே உள்ள பண்ணைவிளை தக்கர் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கினை அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஏராளமான இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்துள்ளது. சாத்தான்குளத்தில் 148வது வார்டு இயந்திரம் காலையில் பழுதடைந்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் அந்த இயந்திரம் சரி செய்யப்பட்டது. அதே போல் ஆழ்வார்திருநகரி, வல்லநாடு, சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி போன்ற பகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்துள்ளது. இதனால் வாக்காளர்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர்.