“அ.தி.மு.க. கூட்டணியினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறுவது மு.க.ஸ்டாலினின் தோல்வி பயத்தை காட்டுகிறது” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு மந்தமாக உள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில், கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்‘ என்றார்.
இதைத்தொடர்ந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று இரவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டுதான், எனது தேர்தல் பணியை தொடங்கினேன். அதேபோன்று மீண்டும் இங்கேயே எனது தேர்தல் பணியை நிறைவு செய்கிறேன். தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்.
வாக்குச்சாவடிகளில் மதியம் 3 மணிக்கு பிறகு அ.தி.மு.க. கூட்டணியினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். இது அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டதையே காட்டுகிறது. ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலை மு.க.ஸ்டாலின் மதிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அனைத்து கட்சிகளின் முகவர்கள் இருக்கின்றனர். எனவே எங்கும் எந்தவித முறைகேடுகளும் நடைபெற வாய்ப்பு இல்லை.
பல ஆண்டுகளாக தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் தி.மு.க.வினர்தான். அவர்கள், காமராஜர் ஆட்சி காலத்திலேயே கையில் வைத்த மையை அழித்து விட்டு, கள்ள ஓட்டு போட்டனர். பின்னர் அவர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் திருமங்கலம் பார்முலாவை அறிமுகப்படுத்தினர். நேர்மையாக தேர்தல் நடந்துள்ளது. தி.மு.க., அ.ம.மு.க.வினர்தான் ஓட்டுக்கு ரூ.300 பணம் வழங்கி உள்ளனர். அவர்களிடம் அதிகமாக உள்ளது. அவர்கள் அதிகமாக வழங்கி இருக்கலாம். நான் ஒரு பைசாகூட வாக்காளர்களுக்கு வழங்காமல், எனது நம்பிக்கையை மக்களிடம் வழங்கி உள்ளேன். எனது வெற்றியை தூத்துக்குடி பறைசாற்ற போகிறது.இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.