நிலக்கடலை, வெல்லம் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களின் கடுமையான விலை உயர்வு காரணமாக, கோவில்பட்டி கடலை மிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்துவது என உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கரிசல் மண்ணைக் கொண்டவை என்பதால், இங்கு விளையும் நிலக்கடலைகள் இயற்கையாகவே அதிக இனிப்புச் சுவை கொண்டவை. இந்த நிலக்கடலைகளைக் கொண்டு தயார் செய்யப்படும் கடலை மிட்டாய்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உலக அளவில் புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. கோவில்பட்டியில் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் கார்த்திக் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மூலப்பொருட்கள் மற்றும் பேக்கிங் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், கடலை மிட்டாயின் தற்போதைய விற்பனை விலையிலிருந்து 25 சதவீதம் விலையை உயர்த்துவது என இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. கடலை மிட்டாய் தயாரிப்பிற்கான முக்கிய மூலப்பொருட்கள் மற்றும் பேக்கிங் கவர்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகச் சங்கச் செயலாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
80 கிலோ கொண்ட நிலக்கடலை மூட்டை 3 மாதங்களுக்கு முன்பு ரூ.9,680 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.12,500 ஆக உயர்ந்துள்ளது. 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லத்தின் விலை ரூ.1,300-லிருந்து ரூ.2,600 ஆக இரட்டிப்பாகியுள்ளது. ஏலக்காய் விலை கிலோ ரூ.2,200-லிருந்து ரூ.3,600 ஆக அதிகரித்துள்ளது.
பேக்கிங் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் கவர் விலையும் உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே தவிர்க்க முடியாத சூழலில் 25 சதவீத விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.


