தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்ட சுகாதார நலச்சங்க ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காசநோய் (TB) தடுப்புப் பிரிவு செயல்பாடுகள் குறித்தும், தொழுநோய் தடுப்புப் பிரிவு செயல்பாடுகள் குறித்தும், மகப்பேறு மற்றும் குடும்ப நலப் பிரிவின் செயல்பாடுகள் குறித்தும், ஆயுஷ் (Ayush) பிரிவின் செயல்பாடுகள் குறித்தும், எய்ட்ஸ் (AIDS) கட்டுப்பாட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவின் செயல்பாடுகள் குறித்தும்,
ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) வாரியான தரவரிசை மற்றும் செயல்பாடுகள் குறித்தும், தாய் மற்றும் சேய் நலம், MRMBS, PICME, HMIS, பச்சிளம் குழந்தை இறப்பு, நடமாடும் மருத்துவக் குழு (MMU), பிரசவ கால MMU மற்றும் பள்ளி சிறார் மருத்துவக் கண்காணிப்பு குழு (RBSK) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும்,
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேசிய சுகாதார இயக்கம் (NHM) மற்றும் தேசிய நகர்ப்புற நலவாழ்வு இயக்கம் (NUHM) திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், தடுப்பூசிக்கு பிந்தைய பாதகமான நிகழ்வுகள் மற்றும் கடத்திகளால் பரவும் நோய்கள், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் மற்றும் தொற்றுநோய் சூழல் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மருத்துவர் யாழினி (தூத்துக்குடி), மருத்துவர் வித்யா (கோவில்பட்டி), துணை இயக்குநர்கள் மருத்துவர் பொன்ரவி (மருத்துவம் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம்), மருத்துவர் சுந்தரலிங்கம் (காசநோய்), மருத்துவர் யமுனா (தொழுநோய்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


