கருங்குளம் சத்திரத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி சுற்றுபயணம் செய்து வருகிறார். அவர் கருங்குளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு வந்து மக்கள் குறை கேட்டார்.
கூட்டத்துக்கு திமுக மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நல்லமுத்து, கருங்குளம் செயலாளர் பரமசிவன் ஆகயோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பலர் தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர். ஸ்வீட்டி என்பவர் கருங்குளம் சத்திரத்தில் பயணிகள் அமர்ந்து பஸ் ஏற பேருந்து நிறுத்தம் பயணிகள் நிழற்கூடம் அமைக்கவேண்டும், இவ்விடத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கவேண்டும், தனி கிராம நிர்வாக அதிகாரி கருங்குளத்துக்கு நியமனம் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஜாஸ்மீன் என்பவர் கல்வி பயிலும் மாணவர்களுக்காக பாளை பஸ்நிலையம் வழியாக பேருந்து இயக்கவேண்டும், கருங்குளத்துக்கு ஆற்று தண்ணீர் சீராக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். கிருபா என்பவர் ஆதிதிராவிடர் பகுதியில் கட்டப்பட்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் இணைப்பு கொடுக்கவில்லை என்று புகார் கூறினார். ஏஞ்சலின் என்பவர் தூதுகுழி குளத்தினை தூர்வாரி, அதன் கரையில் தார்சாலை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தார். கிளாக்குளம் கண்ணன் என்பவர் கிளாக்குளத்தில் கட்டப்பட்ட ரயில்வே சுரங்கபாதை ஊற்று பொங்குகிறது. எனவே ஊருக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விட்டது. 15 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியது உள்ளது. எனவே அந்த இடத்தில் புதிதாக ஒதுக்கப்பட்ட இணைப்பு சாலை பணி முறையாக போடப்படாமல் கிடப்பில் கிடக்கிறது என புகார் கூறினார். அரசு ஆரம்ப சுகாதர நிலையத்துக்கு சீரான குடிதண்ணீர் வழங்ககோரிக்கை வைக்கப்படடது. பொதுசேவை மையம் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படவில்லை. தெற்குகாரசேரியில் தெரு மின்விளக்கு, அடிபம்பு இல்லை. இராமனுஜம்புதூருக்கு தெற்குகாரசேரி வழியாக கூடுதல் பேருந்து இயக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடையார் என்பவர் கருங்குளம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட புளியங்குளம், கிளாக்குளம், சாலைகள் மிக மோசமாக உள்ளது. அதை அமைத்து தரவேண்டும். கருங்குளத்துக்கு அரசு தொழில் நுட்ப கல்லூரி, துணை மின் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்தும் திட்டம் நடைபெறவில்லை, கருங்குளம், தூதுகுழிகுளம், பெரியகுளம், கிருஷ்ணன் குளம், பெட்டைக்குளத்தினை தூர்வாரவேண்டும். ஊரக வளர்ச்சி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினை முறைப்படி நடத்தவேண்டும், தொகுப்பு வீடுகளுக்கு சூரிய மின்சாரம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கை விடப்பட்டது.
அதன்பின் கனிமொழி எம்.பி பேசினார். அவர் பேசுகையில், இங்கே மக்கள் கூறிய குறைகளில் பல குறைகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீர்க்கப்படவேண்டியவையே. குறிப்பாக குடிதண்ணீர், தெருவிளக்கு போன்ற குறைகளை பஞ்சாயத்து தலைவர் இருந்தால் அவரே தீர்த்து தந்து இருப்பார். ஆனால் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்தவே தோல்வி பயத்தினால் அஞ்சி வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டியவர்கள் அதற்கு பைப்லைன் அமைக்க உடனே நிதி ஒதுக்கியிருக்கலாம். ஒன்றிய ஆணையாளர் உடனே முடித்து வைக்கலாம். ஆனால் அதற்கும் காலம் தாழ்த்தி வருவது வேதனை அளிக்கிறது. 100 தேசிய ஊரக வளர்ச்சி திட்ட வேலைகள் ஏழை மக்களின் ஜுவாதாரம் அதில் மத்திய அரசு கை வைக்கிறது. வெளிநாடு செல்லவும் விளம்பர படுத்தவும் பல கோடி ரூபாயை வீணாக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டில் புயல் வெள்ளம் ஏற்பட்டால் அதை கண்டு கொள்ளாமல் உள்ளது. ஊனமுற்ற பையன் ஒருவனுக்கு ஆபரேசன் செய்ய, அவருக்கு ஓய்வூதியம் கொடுக்க 3 ஆயிரம் வரை கையூட்டு கேட்கும் இந்த அரசின் அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன். தொடர்ந்து வரும் நிதியாண்டின் எம்.பிக்கென ஒதுக்கப்படும் எனது நிதியில் இருந்து கருங்குளம் பேருந்து நிறுத்தம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வேன். மற்ற கோரிக்கைகள் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் செய்து தரப்படும் என அவர் பேசினார்.
இதேபோல் இராமனுஜம்புதூரில் நடந்த கூட்டத்திலும் கனிமொழி எம்.பி பேசினார். அவருடன் மாநில மாணவர் அணி துணைசெயலாளர் உமரிசங்கர், பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்கோல் ரமேஷ், பரமகுறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ, இசக்கி பாண்டியன் உள்பட பலர் உடன் வந்தனர்.
கலைஞர் நடத்தி வைத்த திருமணம்
உடையார் என்பவர் பேசும் போது, மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். என் கல்யாணத்தினை இதே ஊரில் கலைஞர் தான் முடித்து வைத்தார். அப்போது வடமொழியில் மந்திரம் சொல்லுவதை தவிர்த்து எனது திருமணம் நடந்தது. மாலை 5 மணி வரை பொறுமையாக கலைஞர் இருந்தார் என்று கூறினார். தொடர்ந்து அவர் கருங்குளத்தில் துணை மின் நிலையம் அமைக்க, தொழில்பயிற்சி மையம் அமைக்க போராடி வருவதாகவும், குளங்களை தூர்வார பணம் ஓதுக்கீடு செய்தாக அறிவித்த அரசு அதை செய்யவில்லை என்றும் பேசினார். கனிமொழி எம்பி பேசும் போது தொடர்ந்து மக்களுக்கு போராடி வரும் உடையார் போன்றவர்கள் திமுகவில் மட்டுமே உள்ளனர் என பெருமிதம் அடைந்தார்.
மகனுக்கு நீதிகேட்டு கதறிய தாய்
கருங்குளம் பாரதியார் தெற்கு தெருவை சேர்ந்த நாரயணன் மனைவி தெய்வானை, தனது மகன் நோயில் பாதிக்கப்பட்டு ஒரு காலை ஆபரேசன் செய்து எடுத்து விட்டனர். அவருக்கு பல லட்சம் செலவாகி விட்டது. அரசு உதவி தொகை கேட்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் சென்ற போது 3500 ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள் என கண்ணீர் மல்க கூறினார். அதை பொறுமையாக கேட்டுக்கொண்ட கனிமொழி உதவி செய்வதாக வாக்களித்தார்.