தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும், கடல் மீன்வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டும் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 15) முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் (கன்னியாகுமரி நகரம் வரை) உள்ள கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. மீன்களின் இனப்பெருக்கத்திற்காக விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் கடலுக்குச் செல்ல இக்காலகட்டத்தில் அனுமதி இல்லை.
மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்: தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால், இன்று (ஏப்ரல் 15) முதல் ஜூன் 14-ம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் எக்காரணம் கொண்டும் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ள நாட்களில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்திற்குள் மீன்பிடி தொழில் சாராத நபர்கள் அல்லது தேவையற்ற வெளி நபர்கள் வருகை தருவதைத் தவிர்க்குமாறு மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணிகள்:
இந்தத் தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளைப் பழுதுபார்க்கும் பணிகளிலும், வலைகளைச் சீரமைக்கும் பணிகளிலும் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகப் பகுதியில் விசைப்படகுகள் அனைத்தும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


