தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1,000 துணை ராணுவத்தினர் மற்றும் ஆயுதப்படை போலீசார் வருகை தந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 1,868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பாதுகாப்பு நிலவரங்களின் அடிப்படையில் 246 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை கம்பெனியினர் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று ரயில் மூலம் மேலும் 1,000 வீரர்கள் தூத்துக்குடி வந்தடைந்தனர். எல்லைப் பாதுகாப்புப் படை 3 கம்பெனிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை 2 கம்பெனிகள், ஒடிஸா மாநில ஆயுதப்படை 1 கம்பெனி, ராஜஸ்தான் மாநில ஆயுதப்படை 1 கம்பெனி, தமிழ்நாடு மாநில சிறப்புப் படை: 2 கம்பெனிகள் இதில் அடங்குவர்.
தூத்துக்குடி வந்தடைந்த வீரர்கள், மாவட்டத்தின் 6 தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்காலிகமாக அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் இவர்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்துதல் மற்றும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுதல் போன்ற பணிகளைத் தொடங்க உள்ளனர். மாவட்டத்தின் அமைதி மற்றும் ஜனநாயகக் கடமையை உறுதி செய்யும் வகையில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


