தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு : தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தொன்றுதொட்டு தை திருநாளுக்கு மறுநாள் மஞ்சுவிரட்டு என்னும் பாரம்பரிய விளையாட்டு நடைபெற்று வந்தது. வல்லநாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத் தேவன் காளையை அடக்கி வெள்ளையம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்ததாக வரலாறு உள்ளது. இத்தகைய பாரம்பரிய விளையாட்டினை தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்துவதற்கு தமிழக அரசு தடையாக உள்ளது.
இதற்கு முன் ஜல்லிக்கட்டு நடந்ததாற்கான போதுமான ஆதரங்கள் இல்லாத திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் முயற்சியால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒரங்கிணைப்பாளர் குயிலி நாச்சியார், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட தலைவர் சிவராம் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.