ஆரோக்கியமான குழந்தைகள் உள்ள மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட கோவில்பட்டியில் நர்சிங் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சொர்ணா நர்சிங் கல்லூரி ஆகியவை சார்பில் கல்லூரி வளாகத்தில் உலக தாய்ப்பால் தின கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நர்சிங் கல்லூரி தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க உறுப்பினர் முத்துமுருகன்,கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஆரோக்கியமான குழந்தைகள் உள்ள மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக கல்லூரி மாணவி தபஸ்வினி வரவேற்றார். வில்லிசேரி அரசு ஆரம்பசுகாதார நிலைய குழந்தைகள் நல மருத்துவர் நிமித்ரா பத்மஸ்ரீ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்தரங்கை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினார். இதில் வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் சசிகணேஷ், செல்லையா, நவீன்,கல்லூரி ஆசிரியர்கள் பூபதி, ரின்சிமோள், திவ்யா, உள்பட மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசிரியை அமலா நன்றி கூறினார்.


