தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ‘சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் கப்பலை கடத்த முயன்ற 4பேரை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக பிடித்தனர்.
இன்று காலை 08:45 மணி முதல் மதியம் 02:30 மணி வரை நடைபெற்ற இந்த ஒத்திகையில், வணிகக் கப்பல் ஒன்றை மர்ம நபர்கள் கடத்துவது போலவும், அவர்களைப் பாதுகாப்புப் படையினர் எவ்வாறு எதிர்கொண்டு மீட்பது என்பது போலவும் மாதிரி பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கப்பலைக் கடத்தியதாகக் கருதப்பட்ட இந்திய கடலோரக் காவல்படையைச் சேர்ந்த முருகேஷ், ஹரீஷ், பாலகிருஷ்ணன் மற்றும் ஆஷிஷ் குமார் ஆகிய 4 நபர்களைப் பாதுகாப்புப் படையினர் திறம்படச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அதன்பின், கப்பலை முழுமையாகத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஒத்திகையைத் திட்டமிட்டபடி நிறைவு செய்தனர்.
இந்த ஒத்திகை நடவடிக்கையில் கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜகோபால், இந்திய கடலோர காவல்படை கமாண்டன்ட் பிரகாஷ் குமார், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன், கடலோர பாதுகாப்பு குழும துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன், வட்டாட்சியர் ஆனந்த், உளவியல் நிபுணர் விக்னேஷ் மற்றும் பென்னட், துறைமுக மாஸ்டர் ஆகியோர் கலந்துகொண்டு ஒருங்கிணைத்தனர்.
மேலும், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, இந்திய கடலோரக் காவல்படை, துறைமுகப் பாதுகாப்புப் படை, மருத்துவக் குழு, தமிழ்நாடு காவல்துறை, கமாண்டோ படை, உளவுத்துறை, வெடிகுண்டு கண்டறியும் மற்றும் அகற்றும் பிரிவு மற்றும் சைபர் பிரிவு ஆகிய பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து இதில் பங்கேற்றன.


