திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டத்தில் வி. எம். சத்திரம் உள்ளது. இங்கிருந்து 3 கி. மீ தொலைவில் ஆரோக்கியநாதபுரம் உள்ளது. அங்கு ஶ்ரீ ஜெயந்திர சுவாமிகள் வித்யா கேந்திரா என்ற பள்ளிகூடம் உள்ளது. இந்த பள்ளிக்கு அருகாமையில் ஒரு மண்டபம் அமைந்துள்ளது.
இந்த மண்டபம் சுமார் 226 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இம் மண்டபத்தின் நுழைவாயில் சுமார் 8 அடி நீளம் கொண்டது. இந்த நுழைவாயிலின் மேல்பகுதியில் உள்ள விதானத்தின் இரண்டாவது பாகு கல்லில் நீண்ட கல்வெட்டு உள்ளது. இதனை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் தொல்லியல் மாணவி ரமணா கண்டுபிடித்தார்.
இந்த கல்வெட்டு மேலிருந்து தரையைப் பார்த்தவாறு 11 அடி உயரத்தில் பதிக்கப்பட்டு இருந்தது.
தலைகீழாக பதிக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டை இந்த மாணவி தன்னுடன் படிக்கும் மீனா, பாரதி மற்றும் சுகன்யா ஆகிய மாணவியர்களுடன் முறையாகப் படியெடுத்தனர்.
பின்னர் கல்வெட்டில் உள்ள தகவலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் உதவி பேராசிரியர் துறை முருகன் மற்றும் மதிவாணன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த கல்வெட்டு தகவலை பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.
இக் கல்வெட்டில் மொத்தம் ஐந்து வரிகள் இருந்தன.. முதல் வரியில் கலியுக ஆண்டு 973 ஆனி மாதம் 7-ஆம் தேதி ஆதித்த வாரம் என்றும் இரண்டாம் வரியில் கோபால புரத்தில் சென்னை பட்டினம் என்றும் 3-ஆவது வரியில் அதற்கு அருகாமையில் , அமைந்துள்ள கோமளேஸ்வர
கோவில் தெருவிலாற்கு என்றும் 4-ஆவது வரியில் குமார முனியப்பன் மற்றும் அவரது தாயார் தெய்வானை பாளையங்கோட்டை என்றும் 5-ஆவது வரியில் கைங்கரியம் கோபால சகாயம் என்ற வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன. சென்னை அண்ணாசாலையில் இருந்து எழும்பூர் செல்லும் வழியில் இந்த கோமளேஸ்வர
கோவில் கோயில் அமைந்துள்ளது. இந்த மண்டபம்
சென்னை கோமளேஸ்வர
கோயில் தெருவில் வாழ்ந்த மக்கள்தான் இந்த மண்டபத்தைக் கட்ட தானம் செய்தனர் என இந்த கல்வெட்டு கூறுகிறது. இந்த மண்டபம் திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
இந்த மண்டபத்தில் ஒரு அறை மட்டுமே உள்ளது. அங்கு விளக்கு வைக்க ஒரு மாடம் உள்ளது. இதனில் இருந்து இந்த மண்டபம் இரவிலும் பயன்பாட்டில் இருந்துள்ளது என அறியமுடிகிறது.
இந்த மண்டபம் இன்றும் நல்ல நிலையிலேயே உள்ளது. இந்த மண்டபத்திற்கு அருகே கோயில் எதுவும் இல்லை. இந்த மண்டபம் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆச்சிமட சாலையின் வட புறத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த மாதிரியான மண்டபங்கள் வி எம் சத்திரம், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், கருங்குளம் ஆகிய ஊர்களில் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலை ஓரத்தில் உள்ளன.



