தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் 38 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மையத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து கீழ வல்லநாட்டில் உள்ள இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தூத்துக்குடி அரசு மாதிரி பள்ளி தொடக்கவிழா இன்று நடந்தது. இந்த பள்ளியில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் 61 பேர் தேர்வு செய்யப்பட்டு இந்த பள்ளியில் இன்று முதல் பயில உள்ளனர்.
அதில் கலந்து கொண்ட கனிமொழி அரசு மாதிரி பள்ளியை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இந்த அரசு மாதிரி பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கல்வி பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் வரும் காலத்தில் நிச்சயம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையையும் ஆளுவார்கள். கொரோனா கால கட்டத்தில் உலகிற்கே மருந்து கொடுத்தது நாம் தான். ஆனால் இங்கு இருக்கக்கூடிய மனிதர்களை மனிதர்களாக மதிக்க நாம் தவறி விடுகிறோம் என்று மிகவும் வேதனையுடன் தெரிவித்தார். ஜாதி, மதம், ஆண், பெண் என்ற பிரிவினையுடன் மிகப்பெரிய மூட நம்பிக்கையுடன் நாம் வாழ்ந்து வருகிறோம். ஒரு கால கட்டத்தில் பல்வேறு சமூகத்தினருக்கும் அதிலும் முக்கியமாக பெண்களுக்கு இந்த கல்வி என்பது மிகப்பெரிய கனவாக இருந்தது. அதை மாற்ற வேண்டும் என்று தான் பெரியார் போன்றவர்கள் பாடு பட்டார்கள் என்று பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


