ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு நாளை (05.08.23) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டி, இந்தியாவின் முதல் முதல் சைட் மியூசியத்தினை துவக்கி வைக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் கடந்த 1876ல் இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடந்தது. இந்த இடத்தில் அப்போதே அருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த பணி கடந்த 145 ஆண்டுகளாக தள்ளிப்போய் கொண்டிருந்தது. கடந்த 2020ம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனால் 145 வருட கனவு நிறைவடைந்தது. இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. திருச்சி தொல்லியல் துறை மண்டல இயக்குனர் டாக்டர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார் தலைமையில் பணி நடந்து வந்தது.
அகழாய்வு பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், வெண்கல பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்விடங்களை தேடும் பணியும் திருக்கோளூர், அகரம் போன்ற பகுதியில் நடந்து வருகிறது.
ஆதிச்சநல்லூரில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கிசெந்தில்ராஜ் அவர்கள் உத்தரவின்படி அப்போதைய தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய் துறையினர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் மூலமாக ஊர் மக்களிடம் இருந்து 5 அரை ஏக்கர் நிலத்தினை இலவசமாக வாங்கி கொடுத்தனர். இதனால் பணி தங்கு தடையின்றி நடந்தது.
நாளை 5ம் தேதி காலை 9 மணிக்கு ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மத்திய அமைச்சர் வருகையை முன்னிட்டு ஆதிச்சநல்லூர் பரம்பில் பி சைட்டில் ஆன் சைட் எனப்படும் எடுத்த பொருட்களை அந்த குழியில் வைத்து காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் அதை சுற்றி கண்ணாடி பேழைகள் அமைத்து மேல் இருந்து குழியின் உள்ளே உள்ள பொருட்களை பார்க்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் முதன் முறையாக ஆதிச்சநல்லூரில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அமைச்சர் பார்வையிடுகிறார். இதற்காக இதை சுற்றிலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட இயற்கை புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே புகைப்பட கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளன. அதை அவர் பார்வையிட்டு விட்டு பின்னர் விழா நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். அங்கு சென்று அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து மேடையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீவைகுண்டம் ஊர்வசி அமிர்தராஜ், விளாத்திகுளம் மார்கண்டேயன், ஒட்டப்பிடாரம் சண்முகையா, கோவில்பட்டி கடம்பூர் ராஜீ, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி சங்கர் கணேஷ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். மலேசியா சுலுத்தான் இதுரீசு கல்வியயியல் பல்கலைக்கழகம் தமிழ் துறை மாணவர்கள் 42 பேரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக ஏற்பாடுகளை திருச்சி மண்டல தொல்லியல் துறையினர் செய்து வருகிறார்கள்.


