நூல் : நெல்லை வரலாற்று சுவடுகள்
ஆசிரியர் : முத்தாலங்குறிச்சி காமராசு
பக்கங்கள் : 244
பதிப்பகம் : PONSORNA PATHIPAGAM
விலை : ரூ. 260
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு குடும்ப வறுமையின் காரணமாக பனிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஒரு சாதாரண போட்டோ ஸ்டூடியோ வைத்து வாழ்ந்து வருபவர். ஆனால் திருநெல்வேலியைப் பற்றி எழுதிக்கொண்டே இருப்பவர். இருபதிற்கும் மேற்பட்ட நூல்கள், இரு நாடகங்கள் எழுதியவர். ஐம்பது வயதிற்குள் ஐம்பது நூல்கள் எழுத வேண்டும் என்ற கொள்கையோடு வாழ்பவர். திருநெல்வேலி சீமைப் பற்றிய, சிறு சிறு, பல அரிய செய்திகளை, இந்நூலில் தொகுத்து வழங்கி உள்ளார். நூற்றுக்கும் மேற்பட்டச் செய்திகளை தரும், அரிய தகவல் களஞ்சியமாக திகழ்கிறது இந்நூல். நெல்லை மாவட்டத்தின், ஒட்டுமொத்த கருத்து கருவூலமாக திகழ்கிறது. திருநெல்வேலி மக்களுக்கே தெரியாத பல அரிய வரலாற்று செய்திகளை திரட்டி வழங்கியுள்ளார். அந்த செய்தித் திரட்டில் இருந்து சில உங்கள் பார்வைக்கு.
1.தென் கயிலை என அழைக்கப்படும் பொதிகை மலையில் வாழும் காணி இன பழங்குடிமக்கள், இது சிவன் மலை என இதில் தங்கள் காலைக்கூட பதிக்க மாட்டார்களாம்.
2.2004 டிசம்பர் 26 அன்று சுனாமி தமிழ்நாட்டின் பல இடங்களில் தனது கோர முகத்தைக் காட்டியது. ஆனால் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதோடு சரி. வேறு எந்த துன்பமும் சுனாமியால் இங்கு நிகழவில்லை.
3.நெல்லை காந்திமதி அம்மாள் ஆலயத்தில் ஆயிரம் வயதுடைய வெண்கல மணி ஒன்று உள்ளது. இந்த மணியின் ஓசை சுமார் பதினைந்து கி மீ வரை கேட்குமாம். நாற்பது ஆண்டுகளாக பழுதாகி நிற்கும் இந்த மணியாகி சீர் செய்ய நூலாசிரியர் வேண்டுகிறார்.
4.சுலோச்சனா முதலியார், லண்டனில் லாட்டரியில் தனக்கு கிடைத்த மொத்த பணத்தையும் கொண்டு, லண்டன் வாட்டர்லூ பாலம் போல, நெல்லையில் கட்டிய பாலம் சுலோச்சனா முதலியார் பாலம் என்ற சுவாரசிய செய்தியைத் தருகிறார் ஆசிரியர்.
5. கலையம்சம் கொண்ட பார்வதி திரையரங்கை திறக்க வந்த முதல்வர்காமராசர், தியேட்டரை ஓட்ட தடை விதித்தது பற்றி, விரிவு பட விளக்கியுள்ளார்.
6. குற்றாலம் – குத்தாலம் (குத்து + ஆலம்) செங்குத்தாய் விழும் நீர் என்னும் பெயர் காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
7. தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் புனித தோமையார் ஆலயத்தில் இறைவனுக்கு தீபம் ஏற்ற ஆறு ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும். இறைவனுக்குச் சேவை செய்ய தணியாத ஆர்வத்தால் திருமணமே செய்யாத, ஆறு ஆறுகளைக் கடந்து செல்லும் ரமணி என்னும் பெண்ணின் வீரக் கதை குறிப்பிடப்பட்டுள்ளது .
8.தூத்துக்குடி (பழைய திருநெல்வேலி மாவட்டம்) மாவட்டத்தில் உள்ள தேரிப்பகுதிகளில் (சாயர்புரம் உட்பட) காற்றால் மண்ணரிப்பு ஏற்படுவதைத் தடுக்க 1890களில் அப்போதைய திருநெல்வேலி ஆட்சியர் கொல்லாம் பழ மரங்களை (cashew tree) நாட்டியிருக்கிறார்.
9.மும்பை – தானா இடையே முதல்முதலில் ரயில் பாதை வந்த போது பணியாற்றிய ஒரு ஆங்கில அதிகாரியின் பெயர் பேக்லாந்து. 1853 ம் ஆண்டு, ஏப்ரல் மாதம்
16 ம் நாள் மும்பையில் முதல் முதலாக ரயில் பாதை போடப்பட்ட நாள். திருநெல்வேலியைச் சேர்ந்த சிலர் அந்த அதிகாரியின் கீழ் தண்டவாளம் போட்டுக் கொண்டு இருந்தனர். மொழி பிரச்சனையினால் அடிக்கடி அந்த அதிகாரி திணறிக்கொண்டு இருந்தார். மாற்றி மாற்றி சம்மந்தமே இல்லாமல் பதில் அளிப்பார். அங்கு வேலை பார்த்த திருநெல்வேலி பணியாளர்கள் தங்களுக்குள் பதில் தெரியாமல் நிற்கும் சக தொழிலாளர்களிடம் அல்லது மாற்றி மாற்றி பதில் கூறுபவர்களை, “ஏன் பேக்லாந்து ஐயா போல் பேசுகிறாய்?” என கேட்கத் தொடங்கினர். அந்த வார்த்தை பேக்லாந்து என மருவி கிட்டத்தட்ட 150 வருடங்களாக நெல்லை பேச்சு வழக்கில் இருந்து வருகிறது.
10. அடுத்ததாக செய்துங்கநல்லூர் என்னும் ஊரின் பெயர்க்காரணம். திருச்செந்தூர் செல்லும் வழியில் அந்த ஊர் இருந்தது. திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் அந்த ஊரில் இளைப்பாறி, தாங்கள் கொண்டு வந்த பொருட்களைக் கொண்டு, உணவு செய்து, உண்டு சென்றதால் செய்து +உண்க +நல்லூர் எனப் பெயர் வந்தது.
11. பொதிகை மலையில் வசிக்கும் காணி இனப் பழங்குடி மக்களின் வித்தியாசமான வாழ்க்கை முறை பற்றி நூலாசிரியர் விளக்குகிறார். அவர்களது இசைக்கருவி கோக்ரா. அந்த கருவியை இசைக்கும் முறை வித்தியாசமாக இருக்கும். அந்த இசையோடு அம்மக்கள் பாடல் பாடும் போது கேட்க மிக இனிமையாக இருக்கும் என சிலாகிக்கிறார் ஆசிரியர்.
இன்னும் இருநூறுக்கும் மேற்பட்ட செய்திகள் இந்நூலில் உள்ளன. அனைத்து செய்திகளையும் ஒரு பக்க அளவிலே கொடுக்கிறார் ஆசிரியர். எனவே வாசிக்க ரத்ன சுருக்கமாய் உள்ளன. சிறுவர் முதல் பெரியோர் வரை வாசிக்கும் வகையில் எளிமையாய் உள்ளது. கையில் எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க மனம் வராத அளவில் சுவாரசியமாகவும் உள்ளது. திருநெல்வேலி பெருமைகளை குழந்தைகளுக்கு வகுப்பில் கூறவும், நம் வீட்டுக் குழந்தைகளுக்கு நமது மாவட்ட வரலாற்றினைக் கதைகளாகக் கூறவும் பயன்படும் அற்புதமான நூல்.
திருமதி. தா. லூர்து அனிற்றா
பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்)
அரசு மேல்நிலைப் பள்ளி
மூலைக்கரைப்பட்டி


