எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 104 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 104 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அன்னாரது நினைவரங்கத்தில் அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், “கரிசல் காட்டு இலக்கியத்தின்“ முன்னோடி எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் இடைசெவல் கிராமத்தில் 16.09.1922ல் பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண இராமானுஜம் – லட்சுமி அம்மாள் தம்பதியின் ஐந்தாவது மகனாக பிறந்தார். பேச்சுத்தமிழில் சாகாவரம் பெற்ற மண்மணம் மிக்க கதைகளைப் படைத்தளித்தவர். படைப்புகளில் கரிசல் நிலவியலும், வெள்ளந்தித் தனமும், பேரன்பும் மிக்க மக்களின் வாழ்வும் சாகாவரம் பெற்றன.
இந்த மண்ணின் உழைப்பாளிகள், விவசாயிகள், பிஞ்சுக்குழந்தைகள், கதவு மற்றும் நாற்காலிகள் கூட அவரின் கதை மாந்தர்களாக மாறி மாயம் நிகழ்த்தின. 1958 முதல் 2021 வரை இலக்கிய பணி செய்துள்ளார். 1991-ம் ஆண்டு “கோபல்லபுரத்து மக்கள்” என்ற நாவலுக்கு “சாகித்ய அகாடமி விருது” பெற்றுள்ளார். 2016-17ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.
எழுத்தாளர் கி.ரா. அவர்கள் 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். இத்தகைய எழுத்தாளரை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு நினைவரங்கம் அமைத்து அவர் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். பின்னர், கி.ரா-வின் மகன் ரா.திவாகர் மற்றும் மருமகள் விஜயலட்சுமி ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
தொடர்ந்து, கோவில்பட்டியில் உள்ள அன்னாரது நினைவரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள தொடு திரையில் அவர்களுடைய வரலாற்று குறிப்பேடுகள், எழுதிய நாவல்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் கோவில்பட்டி சார் ஆட்சியர்ஹிமான்ஷு மங்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்பெ.சா.கருப்பணராஜவேல், கோவில்பட்டி வட்டாட்சியர்அறிவழகன் மற்றும் துறைச் சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


