உலகம் செயற்கை நுண்ணறிவின் மூலம் தொழில்துறையில் பரிணாம வளர்ச்சியடைந்து இருந்தாலும் அவ்வப்போது ஜாதி தீண்டாமை கொடுமைகள் ஆங்காங்கே தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நிகழ்காலமே இப்படி என்றால் பழங்காலங்களில் அது எவ்வளவு தீவிரமாக இருந்திருக்கும் அதனை வேரறுக்கும் விதமாக மக்களிடையே சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் மனித வடிவில் தோன்றிய கடவுளாக அய்யா வைகுண்டர் மேற்கொண்ட புரட்சிகளை இக்கட்டுரையில் பார்ப்போம்.
அன்றைய கேரளம் மாநிலத்தில் ஒருங்கிணைந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இன்றைய நமது கன்னியாகுமரி மாவட்டம் இருந்தது. மன்னராட்சி நடைபெற்றதால் அரசரின் ஏகோபித்த அதிகாரம் அவரின் ஆட்சி பகுதியில் உக்கிரமாக காணப்பட்டது பொதுவாக அவரின் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்கள் நசுக்கப்பட்டனர் குறிப்பாக கீழ்த்தட்டு மக்கள் வரி வசூல், பொதுபாதை மற்றும் பொது கிணற்றுகளில் நீர் எடுப்பதற்கு தடை, ஆண்கள் தோளில் துண்டு அணியக்கூடாது, பெண்கள் மார்பினில் மேலாடை அணியக்கூடாது என எண்ணில் அடங்கா சித்திரவதை அனுதினமும் அனுபவித்து வந்தனர்
இந்நிலையில்தான் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் (தாமரைகுளம்) முத்துக்குட்டி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அய்யா வைகுண்டர் பிறந்தார். இளம் வயதினிலே கீழ்தட்டு மக்கள் படும் துன்பங்களை கண்டு துயருற்ற அவர் மக்களை எப்படியாவது அதிலிருந்து காப்பாற்றிட வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டார் குறிப்பாக மக்களிடையே சமூக சீர்திருத்த கருத்து கடவுள் நம்பிக்கை குறித்த கோட்பாடுகளை போதனையாக முன் வைத்திட மக்களிடையே சிறு சிறு கூட்டங்களை நடத்தினார் இதில் ஏராளமான பொதுமக்கள் சாரை சாரையாக கலந்து கொண்டனர்
தனது போதனையில் மக்களுக்கான சுய ஒழுக்கம், சுயமரியாதை அறிவியல் தத்துவம் என பலவற்றை எடுத்துரைத்தார். வைகுண்டரின் போதனை பணியை பார்த்த திருவிதாங்கூர் அரசாங்கம் மற்றும் மேல் தட்டு வர்க்கத்தினற்கு இது பிடிக்கவில்லை. எனவே, அவரை கைது செய்ய திருவிதாங்கூர் மன்னர் உத்தரவிட்டார். வழக்கம் போல் அய்யா வைகுண்டர் ஒரு நாள் மக்களிடையே போதனை கூட்டம் மேற்கொண்டு இருக்கும்போது காவலர்கள் அய்யாவிற்கு சவுக்கடி கொடுத்து கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர். வாழ்வின் சிறு பகுதியை திருவனந்தபுரம் சிறையில் கழித்த அய்யா பின்னர் விடுதலை பெற்று மீண்டும் கூடுதல் செருக்குடன் சமூக சீர்திருத்த கருத்துக்களை மக்களிடம் பரப்பினார்
இதற்கிடையில் சமத்துவத்தை பேணும் வகையில் அனைவரும் பயன்படுத்தும் பொதுகிணறு (முத்திரிபதம்) ஒன்றை சாமி தோப்பில் அமைத்தார். மேலும் சமபந்தி விருந்து நடத்தினார் இதில் ஆண், பெண் மற்றும் கீழ்தட்டு மேல்தட்டு மக்கள் ஒன்றாக அமர்த்தி உணவருந்த செய்து சமத்துவ புரட்சி மேற்கொண்டார்.
மேலும் ஆண்களை தலைப்பாகை அணிவிக்க செய்தார் பெண்களை மேலாடை மற்றும் தங்க ஆபரணங்கள் அனிவிக்க செய்தார். பல்வேறு சிறிய சீர்திருத்தங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மக்கள் கூட்டம் கூட்டமாக அய்யாவை தேடிச் சென்றனர். இதனால் மிக கடும் கோபம் கொண்ட மன்னர் அய்யாவை பல செயல்கள் மூலம் கொடுமைகள் பல செய்தார். வாழ்வின் இறுதி காலம் வரை அன்புகொடி மக்களின் வாழ்வு மேன்மை அடையும் வகையில் தன் வாழ்க்கையை அர்பணித்தவர்.
அய்யாவின் சீடர் அரிகோபாலன் எழுதிய அகிலத்திரட்டு அம்மானை என்ற நூல் அய்யாவின் உலக வழிகாட்டி நூலா
க உள்ளது 19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்தங்களை ஆழமாக மக்கள் மத்தியில் விதைத்த அய்யா அவர்கள் அவதரித்த தினம் இன்று உலகம் முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரைப் போற்றும் விதமாக தென் தமிழகம் எங்கும் அன்பு நிழல் தாங்கல் மற்றும் பதிகள் என அன்புகொடி மக்கள் அமைத்து அய்யாவின் பொன்மொழிகளுக்கு ஏற்ப தாங்கள் வாழ்வையும் தாங்கள் சுற்றத்தார் வாழ்வையும் நல்வழிப்படுத்தி வருகின்றனர்


