தூத்துக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், வரும் 6ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று சனிப்பெயர்ச்சி விழா மிக விமர்சையாக நடைபெற உள்ளது.
மங்களகரமான மாசி மாதம் 22-ம் தேதி (06.03.2026) வெள்ளிக்கிழமை காலை 8.24 மணிக்கு, ஸ்ரீ சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் இந்த இடப்பெயர்ச்சியை முன்னிட்டு திருக்கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறவுள்ளன. காலை 6.00 மணிக்கு நவக்கிரக ஹோமம், காலை 7.00 மணிக்கு நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8.24 மணிக்கு மஹா தீபாராதனை (சனிப்பெயர்ச்சி சமயம்) நடைபெறுகிறது.
இந்த சனிப்பெயர்ச்சியால் மீன ராசிக்கு ஜென்ம சனியும், கும்ப ராசிக்கு பாத சனியும், மேஷ ராசிக்கு விரய சனியும் தொடங்குவதால், மீனம், மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மற்றும் கும்ப ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிகாரம் செய்ய வேண்டிய பக்தர்கள் தேங்காய், நல்லெண்ணெய், கருப்பு வஸ்திரம் ஆகியவற்றை கொண்டு வரலாம். அர்ச்சனை சீட்டு பெற்று எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளைத் திருக்கோவில் அறங்காவலர் குழு மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


