ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரைக்கு செல்ல 3 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசேகரன் பட்டினம், மணப்பாடு, வேம்பார் உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருவார்கள். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் கடற்கரையில் புனித நீராட இன்று முதல் 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


