பொருநை அருங்காட்சியம் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி மலையில் உலக தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வாழும் ஒவ்வொரு தமிழனும் பெருமை பட வேண்டும். 150 வருட கனவி நனவாகி உள்ளது. 2017ல் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது கூட நான், இப்படியொரு அருங்காட்சியகம் அமையும் என நினைக்கவே இல்லை. ஆனால் இன்று பொருநை அருங்காட்சியகத்தை பார்த்து வியந்தேன். பெருமையோடு இந்த பதிவை எழுதுகிறேன்.
இந்திய வரலாற்றை எழுத வேண்டும் என்றால் தமிழக நிலப்பரப்பில் (பொருநையில்) இருந்து தான் எழுத வேண்டும் என பெருமை பட்டு வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும். 2010 ஆம் ஆண்டே கோயம்புத்தூர் உலக செம்மொழி மாநாட்டில் ஆதிச்சநல்லூரை பேசும் பொருளாக கொண்டு சென்ற நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், தொல்லியல் இயக்குனர் உதயசந்திரன் அவர்களுக்கும் நன்றிதெரிவித்து கொள்கிறேன். அவர்களின் கீழ் தான் இந்த அருங்காட்சியகம் அறிவிக்கப்பட்டு, இன்று உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அருங்காட்சியகத்தினை இரவு 8 மணிக்கு திறந்து வைத்தார். மின்னும் விளக்கு வெளிச்சத்தில் உலக தமிழர்கள் வியந்து பார்க்க இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. 23 ந்தேதி இந்த அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்தினை கண்டு கழிக்க கூடினர். இதைப்பற்றி அறிந்து கொள்ள பத்திரிக்கையாளர்களும் வந்து குவிந்தனர். பெரியவர்களுக்கு 20 ரூபாய், சிறியவர்களுக்கு 10 ரூபாய் கட்டணமும், புகைப்படம் எடுக்க 30 ரூபாயும் , வீடியோ எடுக்க 100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்பட்டது. இங்கே உள்ள 5 டி திரைப்படத்துக்கும், 7 டி திரைப்படத்துக்கும் தலா 25 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இன்றைய விலைவாசியில் இது மிகப்பெரிய கட்டணம் இல்லை. பள்ளி குழந்தைகளுக்கு சலுகை விலை உண்டு. இன்று காலையில் இருந்தே குடும்பத்துடன் மக்கள் வருகை புரிந்தனர். டிக்கெட் எடுத்தவுடன் அவர்களை பேட்டரி கார் மூலம் அறிமுக அரங்குக்கு அழைத்துச்சென்றனர் ஊழியர்கள். அங்கே அச்சுரப்பாக்கம் முதல் கீழ நாட்டார்குளம் குத்துக்கல் வரை கால கணிப்பை வரைவிட்ட படத்தினை பார்க்க வைத்து கண்காட்சியை ஆரம்பித்தனர். நுண்கற்காலம், இரும்பு காலம் என காட்சிபடுத்தியிருக்கிறார்கள். பார்வையாளர்களுக்கு விளக்கம் கொடுக்க அங்கே கைடுகள் உள்ளனர். ஐந்து திணை குறிக்கும் அருமையான வரைபடம், 3150 வருடம் பழமையென நமக்கு பெருமை சேர்த்த சிவகளை நெல்மணிகள், 5300 வருடம் உலகத்திலேயே பழமையான சிவகளை இரும்பு ஆயுதம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதை பார்வையிட்டு ஆச்சரியத்துடன் சென்ற நமக்கு அருமையான படக்காட்சி இலவசமாக காண்பிக்கப்பட்டது. அதில் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், முனைவர் ராஜன், அகழாய்வு இயக்குனர்கள் பாஸ்கர், பிரபாகரன், தங்கத்துரை, அரசு துறைச் செயலாளர் உதயச்சந்திரன். அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேட்டியுடன் விரிவான அகழாய்வு வரலாறு பேசியது. இதில் சிவகளை சைட்டை கண்டு பிடித்த ஆசிரியர் மாணிக்கம் அவர்களின் பேட்டி கூடுதல் சிறப்பை சேர்ந்தது. தொடர்ந்து அந்த அரங்கை விட்டு வெளியே வருகிறோம். எங்களை சிவகளை அரங்கிற்கு கூட்டிச்செல்ல பேட்டர் கார் தயாராக இருந்தது.
எதிரே நான் யாருக்கேனும் நினைவு பரிசு வழங்க வேண்டுமென்றால், பழமையான பொருள்களை உருவாக்கி காட்சிப்படுத்தியிருந்தனர். அருகிலேயே பத்தமடை பாய் உள்பட கைவினைப்பொருள்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து சிவகளை கட்டிடத்துக்கு வருகிறோம்.
இவ்விடம் பழமையை பறை சாற்றும் விதமாக கட்டப்பட்ட கட்டிடத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதற்குள் சிவகளையில் கிடைத்த பொருளும், அருகில் உள்ள வாழ்விடங்களில் கிடைத்த பொருள்கள் மற்றும் தங்கம் போன்றவை மிக அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. உலை மூலமாக இரும்பை எப்படி உருக்குகிறார்கள் என்ற செயல்முறை விளக்கம் இங்கே செய்து காட்டப்பட்டது.
இந்த அரங்கில் ஊனமுற்றோர்கள் வந்தால் கூட அவர்கள் சக்கர நாற்காலியில் பயணம் செய்யலாம். அவர்கள் லிப்ட் மூலமாக மேல் மாடிக்கு செல்லாம் அதன் படி பல ஊனமுற்றோர் தள்ளு வண்டியில் அருங்காட்சியகத்தினை பார்வையிட்டு கொண்டிருந்தனர். பொருள்கள் முன்னால் நின்று படம் மெடுக்கவா, அல்லது கட்டிட கலையை ரசித்து அதன் அருகே நின்று படமெடுக்கவா என பார்வையாளர்கள் திணறும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் மாடியில் உள்ள இடத்தினை தான்முதல்வர் ரசித்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பழங்கால தாழ்வாரம் போன்ற அமைப்பும் இந்த கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
சிவகளையை பார்த்துவிட்டு வெளியே வந்தால், அங்கே பேட்டரி கார் தயார் நிலையில் நின்றது. அதில் ஏறி நாம் ஆதிச்சநல்லூர் பிளாக் வருகிறோம். அங்கே நான்கு கேலரி உள்ளது. இதில் மூன்று ஆதிச்சநல்லூருக்கு ஒன்று துலுக்கர் பட்டிக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆதிச்சநல்லூர் தொன்மையை நாம் கேட்கவே வேண்டாம். பல இடங்களில் பேசி வருகிறோம். 150 வருடங்களாக ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, இந்தியாவிலேயே முதல் சைட் மியூசியம் 2022 ல் அமைக்கப்பட்டு, மத்திய அரசால் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கிடப்பில் கிடக்கிறது. இந்த நேரத்தில் பொருநை அருங்காட்சியகம் நம்மையெல்லாம் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இவ்விடத்தில் பிரமாண்டமான முதுமக்கள் தாழிகள் கண்கவரும் வண்ணமாக வைத்திருக்கிறார்கள். 2022 ல் அகழாய்வு செய்த பொருள்கள் மட்டுமல்லாமல் அலெக்ஸாண்டர் இரியா ஆய்வு செய்த பொருள்களும் இங்கே பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்படியொரு பிரமாண்டம். இரண்டு கட்டிடங்களுக்கு இடையே மாதிரியாக பூமிக்குள் எப்படி முதுமக்கள் தாழி இருக்கும் என காட்சிப்படுத்தியிருந்தனர். இது ஒரு மாதிரி சைட் மியூசியம்.
எதை பார்க்க, எப்படி படிக்க, எதை குறிப்பெடுக்க என தெரியாமல் திணறி நிற்க வேண்டிய சூழ்நிலை. இந்த கட்டிடங்கள் கலையும் வித்தியாசமாக அதேவேளையில் மனதை கவரும் வண்ணம் இருந்தது. நானும் ஓடிச்சென்று அந்த கட்டி கலையோடு படம் எடுத்துக்கொண்டேன். சிஷ்யன் எனக்கு அருமையான புகைப்படம் எடுத்து தந்தான். ஆதிச்சநல்லூர், துலுக்கர்பட்டி பொருகளை பார்த்துகொண்டே வந்தோம். துலுக்கர் பட்டியில்தான் அதிகமான குறியீடு கிடைத்துள்ளது. அதுவும் 60 சதவீதம் குறியீடுகள் சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடு போன்றவை என்பது நமக்கு ஆனந்தமான செய்தி. மிகச்சிறிய சுடுமண்ணில் செய்யப்பட்ட புலி ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நிறைய நாணயங்களையும் சேகரித்து வைத்திருந்தனர். நம்பியாற்றங்கரையில் உள்ள முக்கிய தலங்களை வரைபடமாக வரைந்து வைத்திருந்தார்கள்.
பார்த்துக்கொண்டே அடுத்தகட்டிடத்துக்கு வந்தோம். அங்கே முழுக்க முழுக்க கொற்கை பொருள்கள். சங்குகள், வளையல்கள், கடல் பொருள்கள் என பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருந்தார்.
அருகில் 5 டி திரைப்படம் காட்டுகிறார்கள், உள்ளே செல்ல ஒரு நபருக்ககு 25 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது. சுமார் 50 பேர் இருக்க கூடிய திரையரங்கம். உள்ளே சென்றவுடன் நமக்கு கருப்பு கண்ணாடி தரப்பட்டது. நம்மை இடுப்பு பெல்ட் அணிந்து இருக்கையில் அமைக்கப்பட்டிருந்த கம்பியை பிடித்துக்கொள்ள அறிவுருத்தினார்கள். மறுநிமிடம் படம் திரையிடப்பட்டது. பொதிகைமலையில் தாமிரபரணி ஓடி வரும் அழகுடன் காட்சி ஆரம்பிக்கப்பட்டது. 10 நிமிடம் காட்சி மிகப்பிரமாண்டமாக ஓடியது. அந்த காட்சிகளோடு நாம் ஓடும் விதமாக தியேட்டர் வடிமைக்கப்பட்டிருந்தது. ஓடி வரும் பாறைகளும், மீன்களும் நம் மீது மோதும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் வேண்டும் என தொடர்ந்து கோரி வந்த நமக்கு இந்த காட்சிகள் எல்லாம் உலக தரத்துக்கு இருந்தது. மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டோம். மழை பொழியும் போது நம் மீதும் மழை பொழிந்தது. ஆற்றில் பொதிகை மலை காட்டு வழியே நாமே படகில் செல்வது போல இருந்தது. அங்கிருந்த யானைகளையும் பழங்குடி மக்களையும் அருகில் நின்று ரசித்தோம். தேன் கூட்டை கண்டு மகிழந்தோம். அதில் இருந்து வந்த தேனீகள் நம் மீது மோதி கிச்சுமூச்சு காட்டியது. தியேட்டரில் நம்மை மறந்து இருந்தோம்.
காட்சிகள் முடிந்தது. அங்கிருந்து பிரியா விடை பெற்று கிளம்பினோம். தொடர்ந்து 7 டி திரையரங்குக்கு சென்றோம். அதற்கும் 25 ருபாய் கட்டணம். அங்கே ஒரு படகு இருந்தது. இங்கும் முதல்வர் அமர்ந்து ரசித்திருந்தார். அந்த படகில் சுமார் 20 பேர் இருக்கலாம். அவர்களுக்கு பிரத்யோகமான கண்ணாடி கொடுக்கப்பட்டது. அதை ஊழியர்கள் நமக்கு அணிந்து விடுகிறார்கள். குறிப்பிட்ட நேரத்தில் படம் ஓடுகிறது. பிரமாண்டம் என்றால் அப்படியொரு பிரமாண்டம். கடற்கரைக்கு செல்லும் போது நம்மை தீடீர் குளிர் வாட்டுகிறது. யானை வந்து நம் மீது தண்ணீர் தூவுகிறது. நிசமாகவே நனைந்து விடுகிறோம். அதைத்தொடர்ந்து நாம் நகர்ந்து செல்ல முடியாத அளவுக்கு காட்சிகள் பிரமாண்டபடுத்துகிறது. முத்துக்குளிக்க கடலுக்குள் செல்லும் போது நாமும் செல்கிறோம். அவர்களுடன் முத்துக்குளிக்கிறோம். நம்மை இருபுறமும் திரும்பி பார்க்கச் சொல்லுகிறார்கள். ஆகா. எவ்வளவு பெரிய கடல். அதற்குள் நீந்தும் மீன் வகைகள். முத்துகள். இரும்பு ஆயுதம் தயாரிக்கும் அன்பு நண்பர் வெட்டியபந்தி முருகன் பட்டறையில் உருவாக்கும் தீப்பொறி நமது கண்ணுக்குள் வந்து விழுகிறது. அடுத்து அவர் தயாரித்த இரும்பு ஆயுதத்துடன் நம்மை இடித்து தள்ளியபடி வந்து சிநேகமாய் சிரிக்கிறார்.
செய்துங்கநல்லூர் வயல்வெளியில் விவசாயிகள் நாற்று நடுவது, நாட்டார்குளம் தங்கராஜ் அவர்களின் சகோதரன் புன்சிரிப்புடன் நிற்பது. தூததுக்குடியில் கடலில் சங்கு குளிப்பது, தேரிக்காட்டின் அருமை. இரும்பு உலை என பல காட்சிகள் 10 நிமிடத்தில் நம்மை திணற வைக்கிறது.
மொத்த செலவு ஒரு நபருக்கு 70 ரூபாய் தான் . ஆனால் 5500 வருடங்களுக்கு முன்பு நாம் சென்று தமிழர்களின் பண்பாட்டை இந்த அருங்காட்சியகம் நமக்கு உணர்த்துகிறது.
ஆங்காங்கே பணியாளர்களை நியமனம் செய்து உள்ளார்கள். தூய்மை பணியாளர்கள், கைடுகள் என மிகச்சிறப்பாக இருக்கிறது. மேலும் பலரை வேலைக்கு அமர்ந்த போகிறார்களாம்.
இரண்டு இடத்தில் பொது கழிவறை இருந்தது. மக்கள் நல்லமுறையில் உபயோகிக்க வேண்டும் . சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஒரிடத்தில் டீகடை உள்ளேயே உள்ளது. நொறுக்கு தீனியும் இருக்கிறது. குடும்பத்தோடு சென்று வர ஏற்ற இடம்.
கிழடியை இதுவரை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த நமக்கு அதை விட நான்கு மடங்கு பெரிய அருங்காட்சியகம் கிடைத்து விட்டது. அரசு நெல்லை புது பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து விட்டிருக்கிறார்கள், எனவே அரை மணிநேரத்துக்கு ஒருமுறை பேருந்து வருகிறது.
காவல் துறை கண்காணிப்பும் நடக்கிறது.
உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் வேண்டும் என்று கேட்டோம். அரசு தந்து விட்டது. உலக நாடுகளில் இருந்து இனி வெளிநாட்டு பயணிகள் வருவார்கள். அவர்களுக்காக தமிழிலும் ஆங்கிலேத்திலும் விளக்கம் எழுதி வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் உலக மூலைகளில் கூட தமிழனின் பெருமை பறைசாற்றப்படும்.
அதே வேளையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி , கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் முதலில் இந்த அருங்காட்சியகத்தினை பார்வையிட வேண்டும். அப்போதுதான் நமது தொன்மை நமக்கு தெரியும். நாம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நடக்க இயலும்.
வெளியே வந்தோம். தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் அய்யாவும், துணை இயக்குனர் எதிஸ்குமார் அய்யாவும் நின்று கொண்டிருந்தார்கள். இந்த அலுவலர்கள் கடந்த 1 மாத காலமாக சரியாக தூங்க வில்லை. தினமும் 6 மணிக்கு இவ்விடத்தில் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார்களாம். அதற்கான கலைஞர்கள் வந்து கொண்டிருந்தார்கள். இரவு 7 மணி வரை நிகழ்ச்சி இருக்குமாம்.
கண்டிப்பாக தமிழை நேசிக்கும், தமிழர்களான நாம் ஒவ்வொருவரும் இந்த அருங்காட்சியகத்தினை பார்க்க வேண்டும்.
இந்த அருமையான வாய்ப்பை தந்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் , நிதி அமைச்சர் அவர்களுக்கும், தொல்லியல் இயக்குனர் அவர்களுக்கு,உடன் உழைத்த அனைத்துதொல்லியல் அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கும் . இவர்களுக்கு வேண்டிய உதவியைசெய்து தந்த மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி.
இதுபோலவே கிடப்பில் மத்திய அரசு போட்டிருக்கும் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியமும், அடிக்கல் நாட்டப்பட்ட உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகமும் செயல்பாட்டுக்கு வரவேண்டும். -அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு


