100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் வருகிற 24ஆம் தேதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை சிதைத்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய அலுவலகங்கள் முன்பு வருகிற 24ஆம் தேதி (புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.
இது தொடர்பாக வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில், “கல்வி நிதி, ஜிஎஸ்டி நிதி என அனைத்திலும் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. அந்த வரிசையில் தற்போது கிராமபுற மக்களின் உயிர்நாடியாக இருந்து பலகோடி ஏழை மக்களின் வறுமையை போக்கி வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்ததை சிதைத்து, அதன் திட்டப்பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து திட்டத்தை முடக்குவது, வேலை நாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, “கிராமங்கள் தான நமது நாட்டின் முதுகெலும்புகள்” என்ற அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியை திணிப்பது என சட்டத்தை திருத்தியும் 100 நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நாசக்கார சதிச்செயலையும் அதற்கு ஒத்து ஊதி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யும் அதிமுகாவையும் கண்டித்தும், 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பில் பயன்பெறுவோரை திரட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம் மற்றும் புதூர் ஆகிய நான்கு ஒன்றிய அலுவலகங்கள் முன்பு டிசம்பர் 24 புதன்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.
அந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளான அகில இந்திய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளான அளவில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


