விஸ்வகர்மா மக்களை பிசி பட்டியலில் இருந்து, எம்பிசி பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று எட்டையபுரத்தில் நடந்த விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட ஊராட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் தலைமையில் நடைபெற்றது. விழாவில், விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் ஆர்.எஸ்.எம். மூர்த்தி கலந்து கொண்டு விஸ்வகர்மா கொடியேற்றினார்.
இதைத்தொடர்ந்து பேசிய மாநில தலைவர் மூர்த்தி, “பிசி பட்டியலில் இருக்கும் விஸ்வகர்மா மக்களை எம்பிசி பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவித்த விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை முறைப்படுத்தி விஸ்வகர்மா மக்கள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தார். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் விஸ்வகர்மா மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து விஸ்வகர்மா இளைஞர் அணி மற்றும் கைவினைஞர்கள், தொழிற்சங்க பேரவையைச் சேர்ந்தவர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் சங்கரலிங்கம், பிரதமர் மோடி கொண்டு வந்த விஸ்வகர்மா யோஜனா திட்டம் விஸ்வகர்மா மக்களுக்கு எதிராக உள்ளது என்றும், பிரதமர் மோடி விஸ்வகர்மா மக்களை ஏமாற்றி விட்டார் என்றும் சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசியிருந்தார். பின்னர் இறுதியாக அங்கிருந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.