ஆழ்வார்திருநகரி அருகே முன் விரோதம் காரணமாகத் தகராறு செய்து பாட்டிலால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் சேகர் (49). இவருக்கும் செம்பூர் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் கோட்டாளம் (56) என்பவருக்கும் இடையே நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.
அப்போது, கோட்டாளம் மற்றும் அவரது நண்பரான நாகர்கோவில், மேலமணக்குடி கடற்கரை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் மகன் ஆரோக்கியராஜ் (எ) ராஜேஷ் (38) ஆகிய இருவரும் சேர்ந்து சேகரை பாட்டிலால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஜூடி வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.
கைது செய்யப்பட்டுள்ள கேட்டாளம் மீது ஏற்கனவே ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 11 வழக்குகளும், குரும்பூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், கயத்தார் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், ஆத்தூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என மொத்தம் 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.