வட்டெழுத்தும் தற்கால தமிழும் ஒரே காலத்தில் கிடைத்ததற்கான ஆதாரம்…
நெல்லையப்பர் கோயில் அமைந்துள்ள நெல்லை நகரம் வரலாற்று புகழ் பெற்றது. நெல்லை நகருக்கும் நெல்லை சந்திப்புக்கும் இடைப்பட்ட இடம்தான் ஶ்ரீபுரம்.
ஶ்ரீபுரத்திற்கும் தச்சநல்லூருக்கும் இடையே உள்ள ஒரு சிற்றூர் ஊருடையார்புரம். இந்த ஊரில் ஊருடையாள் அம்மன் கோயில் உள்ளது.
இது இந்த ஊரின் எல்லையில் இருக்கிறது.
இந்தக் கோயில் படிக்கட்டில் பாரதி என்ற மாணவி ஒரு கல்வெட்டைக் கண்டறிந்தாள். இந்தக் கல்வெட்டின் உருவ அமைப்பு அடிப்படையில் பார்க்கும்போது பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கல்வெட்டு இந்தப் பகுதில் நடப்பட்டு இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. ஆனால் இப்போது இந்தக் கல்வெட்டு இந்தக் கோயில் வாசல் படிக்கட்டாகப் பயன்பட்டு வருகிறது. அதுவும் படிக்கட்டின் மேல் பகுதியில்தான் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
பாரதி என்ற மாணவி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு முதுகலை தொல்லியல் பட்டப்படிப்பு பயின்று வருகின்றார்.
இவர் மீனா, ரமணா மற்றும் சுகிர்தா ஆகிய தொல்லியல் மாணவிகள் இணைந்து இந்தக் கல்வெட்டைப் படி எடுத்தனர்.
இந்தத் தமிழ் மொழிக் கல்வெட்டில் 27 வரிகள் உள்ளன. இந்தக் கல்வெட்டு கோட்ச்சடையான் எனத் தொடங்குகிறது. அடுத்ததாக, ஶ்ரீ பன்மரான உடையார்
ஶ்ரீசோழ பாண்டிய தேவர்ருக்கு என்று குறிப்பிட்டுள்ளது. 3ஆவது ஆட்சி ஆண்டு இராஜ இராஜ பாண்டிய நாட்டு முடிகொண்ட சோழபாண்டிய கீழவேம்பு நாட்டு எனவும். நிலம் மற்றும் வேளாண் என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளது.
மேலும் வேளாண் நிலதானம் வழங்கியதை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. அடுத்து இந்தக் கல்வெட்டில் திருவழுதி, செம்பியன், கருமாணிக்க அம்மாள் என்ற பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இறுதியாக “எழுத்து’ என்ற சொல்லும் பொறிக்கப்பட்டுள்ளது. இது இந்தக் கல்வெட்டின் முடிவில் கையெழுத்து இட்டதை உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் இது ஒரு முற்று பெற்ற கல்வெட்டு என உறுதியாகக் கூறலாம்.
சோழ பாண்டிய தேவர்ருக்கு என்று வார்த்தை முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சியின் கீழ் கப்பம் கட்டி ஆண்டுவந்த மன்னர்களுக்கு வழங்கப்பட்ட பெயராகும் எனவும் ; இந்தக் கல்வெட்டு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனவும்; “சோழப் பாண்டியர்” என்ற சொல்லும்
இந்தக் கல்வெட்டின் ஐந்தாவது வரியில் “இராஜராஜ பாண்டிய நாட்டு முடி கொண்ட சோழ பாண்டியன்” என்று உள்ளதால் பாண்டியர்கள் சோழர்களுக்குக் கப்பம் கட்டிவந்ததாகவும்; இராஜ ராஜன் ஆட்சிக்குப் பின்னர் சுமார் 300 ஆண்டுகள்வரை தென்தமிழகப்பகுதியான திருநெல்வேலி உள்ளிட்டப் பகுதிகள் சோழர்கள் ஆட்சிக்கு உட்பட்டதாகவே இருந்துள்ளது என்பதை இந்தக் கல்வெட்டும் உறுதி செய்கிறது என்றும்; திருநெல்வேலி பகுதியை இராஜராஜ பாண்டிய மண்டலம் எனச் சோழர்களும், இந்தப் பகுதியைக் கீழ வேம்பு நாடு என்று பாண்டியர்களும் குறிப்பிடுகின்றனர் எனவும் தொல்லியல் துறை உதவிப் பேராசிரியர்களான முருகன் மற்றும் மதிவாணன் ஆகியோரிடம் தெரிவித்தனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஒன்று
சில வாரங்களுக்கு முன்னர் தூத்துக்குடிக்கு அருகே உள்ள ஆத்தூர் என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் இராஜராஜன் காலத்தயதுதான். இது வட்டழுத்தில் எழுதப்பட்டிருந்தது. திருநெல்வேலியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்வெட்டும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதுதான். ஆனால் இந்தக் கல்வெட்டு தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இதில் இருந்து ஒரே காலகட்டத்தில் தற்கால தமிழ் எழுத்தும் பழமையான வட்டழுத்தும் புழக்கத்தில் இருந்துள்ளது எனப் அறிய முடிகிறது.
மாணவ மாணவிகளின் உழைப்பால் தொல்லியல் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. வண்ணத்துப்பூச்சிகள் ஆங்காங்கே பறந்து திரிந்து உண்மைகளை பதிவு செய்து வருகின்றனர்
“சரி.. இந்த கல்வெட்டு ஏன் கோயில் வாசலில் பதிக்கப்பட்டது” என்ற சிந்தனை வந்தது.
“சோழர்களுக்குக் கப்பம் கட்டிய பாண்டியர்கள் கை ஓங்கியபோது இந்த கல்வெட்டு எரிச்சலை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதனால் அவமான படுத்தும் விதமாக வாசலில் பதித்து மகிழ்ந்த இருக்க வேண்டும்” என்றது என் மனம்.



