இதுவரை
குவைத் செல்ல எனக்கு தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கம் வாய்ப்பை தந்தது. இதற்காக முனைவர் சுதாகர் அவர்களின் நண்பரும் சிறந்த தொழதிபருமான பலவேச முத்து அய்யா ஏற்பாடு செய்திருந்தார். அவர் மூலமாகத்தான் முதல் பயணத்துக்கு டிக்கெட் எடுக்கப்பட்டது. ஆனால் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் முதல் பயணத்தில் என்னால் செல்ல இயலவில்லை. ஆனால் டாக்டர் சுதாகர் பயணம் செய்து விட்டு குவைத்தை பற்றி நிறைய முகநூலில் எழுதியிருந்தார். அதைத்தான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் வாழ்வில் முதல் முறையாக விமானத்தில் மும்பை செல்ல வாய்ப்பு கிடைத்தது. அந்த பயணத்தினை கடந்த பகுதியில் எழுதினேன். அந்த வேளையில் விமானத்தில் எனது வீட்டுக்கு தெரியாமலேயே சென்று வந்தேன். ஆனாலும் மும்பை நிகழ்ச்சியினை முகநூலில் பதிவிட்டு மனைவியிடம் மாட்டிக்கொண்டேன்.
இனி.
மும்பையில் செயல்பட்டு வரும் செந்தூர் தமிழாய்வு அறக்கட்டளை சார்பில் தமிழ் புத்தாண்டு விழா நடந்தது. அதில்தான் நான் கலந்துகொண்டேன்.
மும்பை முலுண்ட் மேற்கு வித்யா மந்திர் வளாகத்தில் நடந்த விழாவில் தமிழர்களின் கலாச்சாரத்தினை மேம்படுத்தும் விதமாக தமிழக் காலந்தேர்( நாள்காட்டி) வெளியீட்டு விழா நடந்தது. இந்த நாள் காட்டியை உருவாக்கியவர் செந்தூர் நாகராஜன். சிறந்த எழுத்தாளர் . பேச்சாளர். இவர் தமிழ் காலண்டரை உருவாக்கியிருந்தார். அதற்காக அவர் நிறைய காலங்களை செலவிட்டிருந்தார். தமிழ்களுக்கே பெருமையாக இந்த காலண்டர் அமைந்திருந்தது. அதன் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்று , தாமிரபரணி பற்றி பேச வேண்டும். மேலும் திருக்குறள் ஒப்புவித்த தமிழ் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கவேண்டும் இதுதான் என்னுடைய மும்பை பயணத்திற்காக கொடுக்கப்பட்ட வேலை.
என்னை அந்தேரி விமான நிலையத்தில் இருந்து மும்பை பாண்டூப் கூட்டிச்சென்றார்கள். அங்கே மதிய உணவை முடித்து விட்டு, கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். சாயங்காலம் நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்துச்செல்கிறோம் என கூறிவிட்டு பிரமாண்டமான லாட்ஜ் ஒன்றில் வாடகைக்கு அறையை பதிவு செய்து, என்னை அங்கே விட்டு விட்டு எழுத்தாளர் செந்தூர் நாகராஜனும், எனது மாமா மாயாண்டி அவர்களும் சென்றனர். அந்த காருக்கு ஓட்டுனராக பவுல் அண்ணன் என்னிடம் சிறிதுநேரம் பேசி விட்டு அவரும் கிளம்பினார். நானும் சந்தேசமாக ஒரு குளியல் போட்டு விட்டு படுத்து விட்டேன். சிறிது நேரத்தில் தூக்கம் வந்தது.
சரியாக6 மணிக்கு மீண்டும் மூவரும் வந்தார்கள்.
என்னை அழைத்துக்கொண்டு முலுண்ட் பகுதியில் விழா நடக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்றனர். 14.04.2023 ந்தேதி இரவு காலண்டர் வெளியிட்டு பேசினேன். இந்த நிகழ்ச்சிக்கு வணிக துறை அதிகாரி சுரேஷ் பெரியசாமி தலைமை வகித்தார். தாமிரபரணி நதிக்கரை நாகரிகம் என்ற தலைப்பில் நான் சிறப்புரையாற்றினேன். அதிகமான தமிழர்கள் இதில் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட நான் தாமிரபரணி கரையில் உள்ள ஊர்களை பற்றி பேசியதை கேட்ட மும்பை வாழ் தமிழர்கள், தாங்கள் உறவு கார ஊரைப்பற்றி பேசினீர்கள். சொந்த ஊரைப்பற்றி பேசினீர்கள் என என்னிடம் வந்து அறிமுகம் ஆனார். இரவு டிபனை அவர்களோடு முடித்து விட்டு, இரவு காட்கோபரில் உள்ள அய்யா கோயிலுக்கு தரிசனம் செய்ய கிளம்பினேன். இந்த கோயிலுக்கு என்னை ஏன் தரிசனம் செய்ய நடுஇரவில் அழைத்துச்சென்றார்கள் என அப்போது எனக்கு புரியவில்லை. ஆனால் அங்கே எனக்கு இன்ப அதிர்ச்சி காத்து க்கொண்டிருந்தது.
அந்தேரி காட்கோபர் லிங் ரோட்டில் , காட்கோபர் நித்தியானந்தா நகரில் தான் இந்த அய்யா கோயில் உள்ளது. இந்த கோயில் இருக்கும் இடம் மும்பையில் செப்படாப்பட்டி என அழைக்கப்படும் குடிசை பகுதி. இங்கு சிறு சிறு வீடுகளாக கட்டி வைத்திருப்பார்கள். அதில் பல கல்லி எனப்படும் சந்து தெருக்கள் காணப்படும். அந்த சந்து தெரு வழியாக ஒரு செப்படாப்பட்டி மாடியில் தான் அய்யா கோயில் இருந்தது. நாங்கள் மாடி ஏறி உள்ளே சென்றோம். அதுவும் மிகவும் குறுகலான ஏணிப்படி. ஏறவே கஷ்டப்பட்டுத்தான் ஏறினேன். 10க்கு 10 அறைத்தான் அங்கே சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அய்யா, ராதா அம்மா மூலமாக கணக்கு சொல்லிக் கொண்டிருந்தார். இவர் கணக்கை கேட்க தமிழர்கள் மட்டுமல்லாமல் பல மொழியினர் கூடியிருந்தது பெருமையாக இருந்தது.
பூதபாண்டி & ராதா தம்பதிகளுக்கு பூர்வீகம் தாமிரபரணி ஆற்றங்கரை விக்கிரமசிங்கபுரம். இவர்கள் கடந்த 40 வருடங்களாக மும்பையில் வசித்து வருகிறார்கள். விக்கிரம சிங்க புரத்தில் பூதபாண்டியின் மூதாதையர் வீட்டில் கரையான் புற்று வளர்ந்து கொண்டே இருந்து இருக்கிறது. அதை சுத்தம் செய்தும் மீண்டும் வளர்ந்தது. தொடர்ந்து இது என்ன என கேட்ட போது இவரது பூட்டன் உடலில் அய்யா வைகுண்டர் தோன்றி, நான் தான் சாமிதோப்பு அய்யா வந்திருக்கிறேன். தர்மம் செழிக்க இங்கிருந்து ஆட்சி செய்கிறேன் என்றார். அதன் படியே அவர் விக்கிரம சிங்கபுரத்தில் அருளாட்சி செய்து கொண்டிருந்தார். சுமார் மூன்று தலைமுறைக்கு பிறகு மும்பையில் பூதபாண்டி ராதா தம்பதிகள் வாடகைக்கு குடியிருக்கும் இந்த வீட்டில் எனக்கு இருப்பிடம் வேண்டும் என அய்யா வந்து அமர்ந்து தமிழர்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழி, இனத்தினவருக்கும் அருள் வழங்கி கொண்டிருக்கிறார் என நினைக்கும் போது பெருமையாக த்தான் இருந்தது.
தற்போது இதே இடத்தினை வாங்கி சொந்த இடத்தில் கோயிலை கட்டி வணங்கி வருகிறார். இவர் வடாகை வீட்டில் வசித்த இடத்தில் தான் அய்யா உத்தரவாகி இங்கு கோபுரமும் கொடிமரமும் ஆவவேன் என்று வாக்குரைத்தாராம். அதன் படியே ராதா அம்மா மூலம் முள்படுகையில் நின்று மக்களுக்கு கணக்கு கூறி வருகிறார். 1999 ஆகஸ்டு 15 ல் இந்த கோயில் நிருவப்பபட்டது. தற்போது 25 வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. அதற்கான ஆயத்தபணி இந்த கட்டுரை வெளிவரும் சமயத்தில் வெளி வருகிறது.
நான் கோயிலுக்கு சென்ற சிறிது நேரத்தில் என்னை அழைத்து கணக்கு சொன்னார் அய்யா. “மகனே நீ வந்திருக்கும் இவ்விடம் மட்டுமல்ல வருங்காலத்தில் கடல் தாண்டி சென்று பாராட்டு பெற்று வருவாய் மகனே” என்று அருளாசி கூடி திருமண் தந்தார். எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.திருமண் ஈட்டு ஆசிர்வாதம் செய்தார். அதன் பின் நாங்கள் தங்கி இருந்த பாண்டூப் பகுதிக்கு திரும்பினோம்.
வரும் வழியில் மனது சொன்னது. “நாம் ராசி இல்லாத ராஜா. நாமாவது கடல் தாண்டி செல்வதாவது. ஏற்கனவே நாம் ஒரு சமயம் குவைத் செல்ல வேண்டும் என்ற பயணம் ரத்தாகி விட்டது. இனி எப்போது அந்த வாய்ப்பு கிடைக்கப்போகிறது” என மனதுக்குள் நினைத்தேன். ஆனாலும் அய்யா வாக்கு சொன்னவருக்கு நமது கதை எப்படி தெரிந்து இருக்கும். நம்மை பார்த்தவுடனே இப்படி சொல்லியிருக்கிறாரே. அப்படியென்றால் விரைவில் குவைத் செல்ல வாய்ப்பு கடைக்கும் என நம்பிக்கை எனக்கு பிறந்து. மறுநாள் விமானம் மூலம் மதுரை வந்து, ஊருக்கு வந்தேன்.
ஆவல் மிகுதியில் நான் மும்பை நிகழ்ச்சியை எனது வாட்சப்,முகநூல், இன்ஸ்ஸாகிராம் என பதிவிட, என் வீட்டு எதிரே இருந்த வர்கள் அதை பார்த்து, “மாமா எப்போ மும்பை போனார்கள்” என வீட்டில் போய் கேட்க, நான் பொய் சொல்லி விட்டு மும்பை வந்த செய்தி என் மனைவிக்கு தெரிந்து விட்டது.
வீட்டுக்கு வந்தவுடனே வரவேற்பு மிகவும் பயங்கரமாக இருந்தது. உங்களை விமானத்தில் ஏறக்கூடாது என்று டாக்டர் சொன்னாரே. நீங்கள் எப்படி போகலாம் என மனைவி கோபித்துக்கொண்டார். ஆனாலும் மும்பை விமானத்தில் ஏறிய காரணத்தினால் குவைத் செல்ல விமானத்தில் ஏறவும் சம்மதித்து விட்டார். விரைவில் அய்யா சொன்ன வாக்கு பலித்தது.
மே 10, 2024 ஆம் நாள் குவைத் செல்ல நாள் குறிக்கப்பட்டது. விசா வாங்குவது, டிக்கெட் எடுப்பது உள்பட பல வேலைகள் நடந்து முடிந்தது.
தமிழ் நாடு பொறியாளர் சங்கம்தான் எங்களைக் குவைத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தச் சங்க நிர்வாகிகளுக்கு மற்றும் உறுப்பினர்களும் டாக்டர் சுதாகர் அவர்களின் நண்பர் பலவேசமுத்துவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவேண்டும். இந்த ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டு. குவைத் சிட்டியில் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க 25 வது ஆண்டுவிழா. இந்த விழாவில் நானும், டாக்டர் சுதாகரும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள பேச வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்பது சாதரண விசயமாக என்ன?. அதே போல் இரண்டாம் நாள் மகளிர் மட்டும் நடத்திய கூடுகையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆச்சி சொன்ன ஆத்தோரக் கதைகள் பேசவும் வாய்பு கிடைத்திருப்பது என் வாழ்வில் பெரும் பேரீன்பம் அல்லவா-?. இந்த வாய்ப்பை பெற்றுத்தந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொல்லியல் துறை தலைவர் டாக்டர் சுதாகர் அவர்களுக்கு அன்பை பொழிந்த தமிழ்நாடு பொறியாளர் சங்க தலைவர் ஜெகன், எங்களை வரவேற்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்த செயலாளர் அசோக், விருந்தோம்பல் உள்பட பல்வேறு உதவிகளை செய்த பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோருக்கும் குவைத் தமிழ் சொந்தங்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்ளவேண்டும்.
இதற்கிடையில் பலவேச முத்து அய்யாவை பற்றியும் நிர்வாகிகள் பற்றி அசைபோட ஆரம்பித்தேன். அவர்கள் தங்களது வாழ்க்கையில் பெற்ற வெற்றிகள், குவைத்தில் அவர்கள் பணியாற்றி ஜெயித்த வரலாறுகள் பொன் எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியது. அந்த வரலாற்றை உடனே சேகரித்து எழுத வேண்டும் என திட்டமிட்டேன்.
பெரும் பாலுமே வெளிநாட்டுக்கு சென்று சம்பாதித்து வருகிறார்கள் என மிக சுலபமாக கூறுகிறோம். அவனுக்கென்ன வெளிநாட்டு பணம் என பொறாமை பட்டு பேசுவோம். ஆனால் வெளிநாட்டில் செல்பவர்கள் உழைப்பு மற்றும் அவர்களின் தியாகத்துக்கு பல விசயங்களை நாம் குறிப்பிடலாம்.
பலர் வெளிநாடுகளுக்கு சென்று கற்றுக்கொள்ளும் பாடங்கள் பலவாகும்.
இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு கீழ்கண்ட கருத்தை கூறுலாம்.
ஒரு கப் நெய் சோறு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று படித்ததும் இங்கேதான்.
நாம சாப்பிட்ட, குடிச்ச பாத்திரத்தை நாம்தான் கழுகி வைக்க வேண்டும் என்று படித்ததும் இங்கேதான்.
எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பில்லை, காரமில்லை, சுவை இல்லை என்று குறை சொல்லக்கூடாது என்றும் படித்தது இங்கேதான்.
இன்று பிரிட்ஜில் வைத்து நாளை சூடாக்கி சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது என்று படித்ததும் இங்கேதான்.
வாழ்க்கையில் சரியான நேரத்திற்கு அலாரம் வைத்து எழுந்திருக்கவும், உறங்கவும் படிச்சது இங்கேதான்.
சத்தம் இல்லாமல் கதவை திறக்கவும் மூடவும் படித்தது இங்கேதான்.
தனது கனவு தேவதையாக தலையணையை கட்டிப்பிடித்து உறங்கி பழக படிச்சதும் இங்கேதான்.
பொறுமை என்ற 3 எழுத்திற்கு அர்த்தம் என்ன என்பதை படித்ததும் இங்கேதான்.
எவ்வளவு கும்மிரட்டிலும் ரூமில் உறங்குப வர்களுக்கு தொந்தரவு செய்யாமல் ஆடை அணியவும், சாப்பாடு சாப்பிடவும் படித்தது இங்கேதான்.
நூறு கிடைத்தாலும் பத்து ரூபாய் கடன் வாங்கி 110 ஆக நாட்டுக்கு அனுப்ப படித்ததும் இங்கேதான்.
மின்சாரத்தையும், தண்ணீரையும், சோப்பையும், பற்பசையையும் சிக்கனமாக உபயோகிக்க படித்ததும் இங்கேதான்.
பள்ளிக்கூடத்தில் 10 அல்லது 15 வருடங்களில் படிக்காத பல மொழிகளைப் படித்ததும் இங்கேதான்.
வாழ்க்கையில் இன்ப துன்பங்களை தாங்கி வாழ பழகி படிச்சதும் இங்கேதான்.
சொந்தமாக ஒரு சாயா கூட போட தெரியாதவன் வெளிநாட்டுக்கு வந்து ரெண்டு மூணு மாதங்களுக்குள் பிரியாணியும் சாயாவும் போட படித்ததும் இங்கேதான்.
உலகத்தில் எங்கேயும் படிக்க கிடைக்காத பொருளாதார சாஸ்திரத்தை படித்ததும் இங்கேதான்.
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளைப்பூடு, மஞ்சப்பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி ஆகியவை சூடாக்கிய எண்ணெயில் போட்டு வதக்கி மீன் போட்டால் மீன் குழம்பும், சிக்கன் போட்டால் சிக்கன் குழம்பும், மட்டன் போட்டால் மட்டன் குழம்பும், மோர் ஊற்றியால் மோர் குழம்பும் ஒன்றும் போடவில்லை என்றால் அது தக்காளி குழம்பும் என்கிற வெளிநாட்டு வித்தையை வேற ஏதாவது யுனிவர்சிட்டிலோ அல்லது ஹோம் சயின்ஸ் பாடத்திலோ படித்திருக்க முடியுமா?
யாரோ எழுதிய முகநூல் பதிவில்தான் உங்களில் ஒருவன் என வெளிநாட்டில் வாழ்ந்த தமிழன் ஒருவன் இந்த பதிவை இட்டிருந்தார். அதை படித்தவுடன் ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் வெளிநாட்டு தமிழனின் வாழவியலில் கஷ்டம் நமது மனதை நெருட வைத்தது.
இன்றும் ஒவ்வொரு கிராமத்திலும் குவைத் காரர் வாழ்வார். அவர் குவைத் தாத்தா, . குவைத் காரர், என தனது பெயருக்கு முன்னால் குவைத் என்ற அடைமொழியோடு வாழ்ந்து கொண்டுத்தான் இருக்கிறார்கள்.
இன்றும் பல குவைத் காரர்கள் குடும்பம் வாழ்கிறது. அரபு நாட்டில் எந்த நாட்டுக்கு சென்று வந்தாலும் அவர்கள் எல்லோரும் குவைத் காரர்கள் தான். தமிழனுக்கு வெளிநாடு என்றாலே குவைத் மட்டும்தான் தெரியும். குவைத் சாரம், குவைத் சட்டை என குவைத் புராணம் இல்லாத தமிழ் கிராமங்களே இருக்காது. அந்த குவைத் நகருக்குதான் நாம் செல்கிறோம்.
அந்த நகரில் தான் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
தற்போது குவைத் செல்ல எங்களுக்கு திருவனந்தபுரத்தில் இருந்து டிக்கெட் எடுக்க வில்லை. மாறாக தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்துதான் எடுத்து இருந்தார்கள்.
நாங்கள் தூத்துக்குடி விமானநிலையத்தில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து குவைத் செல்ல வுள்ளோம்.
இதற்கான விசா வந்து விட்டது . டிக்கெட் வந்தது. மே 8 ந்தேதி பயணத்துக்கான நாள் குறித்தாகி விட்டது.
ஆனால் அந்த நாள் வரை நம்மால் அமைதியாக இருக்க முடியவில்லை. அதுவரை குவைத் பற்றி நிறைய செய்திகளை சேகரித்துக்கொண்டே இருந்தோம்.
அதில் குவைத் மாநகரில் ஜெயித்த பலவேசமுத்து அய்யா பற்றியும், குவைத் மாநகர் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் குறித்தும் பேசுவாம்.
(குவைத் பயணம் தொடரும்)