நெல்லை மாவட்டத்துக்கு ஒரு பெருமை உண்டு. இங்குதான் ஐவகை நிலங்கள் உண்டு. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி( மேற்கு தொடர்ச்சி மலை), காடும் காடு சார்ந்த இடமும் முல்லை. இது மேய்ச்சல் நிலமாகும்( நான்குநேரி ,விஜயநாரயணம் போன்ற இடங்கள்) வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்( தாமிரபரணி உள்பட பல நதிகள் பாயும் இடம் நெல்லை மாவட்டத்துக்கு உண்டு) கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் ( இடிந்தகரை, கூந்தங்குளி ) . சரி. பாலைவனம் எங்குள்ளது. தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் முல்லையும் குறிஞ்சியும் முறமையில் பிரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும் என கூறியுள்ளார்.
அப்படி தோன்றிய இடம் தான் தேரிக்காடு. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் ஆரம்பித்து அப்படியே தூத்துக்குடி மாவட்டம் சாயர் புரம் வரை இந்த தேரிக்காடு பரந்து விரிந்து காணப்படுகிறது. கண்ணுக்கு எட்டிய வரை ஓரே மணற்காடு. இங்கு மணற்குண்டு உயரம் உயரமாக காணப்படுகிறது. மணல்மேடுகள் தேர் போல உயரமாக திரடு போல காணப்படுவதால் தேர் + காடு தேர்காடு என்பதே மருவி தேரிக்காடாகி விட்டது-. இங்குள்ள மணல் எங்கும் இல்லாத அதிசயமாக செக்கச்செலேன்று அழகாய் இருக்கிறதே. இதற்கு காரணம் என்ன? முருகனுக்கும் சூர பத்மனுக்கும் போர் நடந்த போது அசுரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களது ரத்தம் என புராணம் சொல்லுகிறது. பலர் இதை நம்ப மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த தேரிகளை தோண்டி ஆய்வு செய்தனர். இங்கு முன்று அடுக்காக மணல் படிந்திருப்பதை கண்டார்கள். முதல் அடுக்கு 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இரண்டாம் அடுக்கு 5 ஆண்டுகளுக்கு முந்தையது மூன்றாவது அடுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. என்று கணக்கிட்டு உள்ளார். இந்த தேரி மணல் எங்கிருந்து வந்தது. இந்த தேரியில் ஒரே அளவாகவும மணல்மேடுகள் ஒரே இடத்திலும் காணப்படும் என்று கூற முடியாது. பெருங்காற்று சுழன்று அடிக்கும் போது மணல் பறந்து புழுதியேறி இடம் மாறுவது உண்டு. இவ்விடத்தில் ஒருவர் வெள்ளை சட்டையுடன் சென்றால் காற்றில் மணல் பறந்து அவரை சிவப்பு சட்டைகாரராக மாற்றிவிடும். ஆய்வாளர் பெரீபுரூஸ் என்பவர் நமது பகுதியை ஆய்வு செய்த போது தாமிரபரணி தோன்றும் பொதிகை மலையை செம்மலை என்று கூறியிருக்கிறார். செம்மலையில் தோன்றிய தாமிரபரணி செவ்வாறு. அப்படியென்றால் ஒரு காலத்தில் கட்டுகடங்காமல் ஓடிய நமது தாமிரபரணி கொண்டு விட்ட மண் தான் இந்த தேரி மண் என்று நம்பலாம். நம்பிதான் ஆக வேண்டும். செவ்வாறு ஓடி செழிப்பாக்கிய இடம் தான் இந்த தேரிக்காடு, முல்லையும்( தாமிரபரணி பாசன நிலம்) குறிஞ்சியும்( பொதிகை) முறம்பையில் பிரிந்து பாலை( தேரி) என்பதோர் படிவம் கொண்டதோ… சரி. இது ஒரு புறம் இருக்கட்டும்.
எனக்கு வேதனை யெல்லாம் செவ்வாறாக ஓடிய தாமிரபரணி இன்று சாக்கடை கலந்து கருப்பாறாக மாறி விட்டதே என்பது தான்.
தாமிரபரணியே உனக்கு அணைக்கட்டி, உன்னை அங்கு இங்கு திரும்பு விடாமல் வளையம் போட்டு எங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். ஒரே மாவட்டத்தில் ஓடும் நதி.. என அடிக்கடி கூறி. உன்னை மாசு படுத்துவதை நாங்கள் கட்டுபடுத்தாமல் விட்டு விட்டோம். இப்போது எங்களின் பாவங்களையும் அழுக்குகளையும் சேர்ந்து சுமந்து வந்த தாமிரபரணியே .. நீ.. கூவமாக மாறிக்கொண்டிருக்கிறாய். உன்னை காப்பாற்ற யாரும் இல்லையே தாயே…. இப்போது நினைக்கிறேன். நீ.. செவ்வாறாக ஓடி தேரி மணலை உருவாக்கவில்லை. புராணம் சொல்வது போல சூரபத்மன் என்று உன்னை கொலை வெறியுடன் சுற்று புற சூழல் பாதுகாப்பு இன்றி சாக்கடை கலந்து தாக்கும் எங்களிடம் 2016 ஆண்டில் குற்றுயிரும் குறையுருமாய்ஆகி விடுவேன் என்று உனக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து விட்டது. எனவே தான் உன் ரத்தத்தினை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தேரி மணலில் கொட்டி அதை பாதுகாப்பாய் வைத்து விட்டாயோ?. உன் ரத்தம் சிந்தியதால் இந்த தேரி ரத்த சிவப்பாய் காணப்படுகிறேதோ..-?. என நினைக்க தோன்றுகிறது.
இனியாவது தாமிரபரணி அருமை புரிந்து அவளை காப்பாற்றி நமது சந்நதிக்கு கொடுக்க ஆயத்தமாவோம் நண்பர்களே..
நான் படத்தில் நிற்பது சாயர் புரம் தேரிக்காடு


