தமிழக வரலாற்றில் முதல் முறையாக நேர்மையான அதிகாரியாக பணியாற்றி உளவுத்துறை ஐஜியாக ஆசியம் மாள் பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் தாமிரபரணிக்கரையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் தாலூகா, தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர். இவரைப் பற்றிய விவரம் வருமாறு
தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு 30 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக ஆசியம் மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் இது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஐஜியாக பணி உயர்வு பெற்றுள்ளவர்களில் ஆசியம் மாளும் ஒருவராவார்.
கொங்கராயகுறிச்சியில் ஜக்கரியா – முகைதீன் பாத்திமா ஆகிய தம்பதிகளுக்கு 5 மகள்கள். அதில் முதல் மகளாகப் பிறந்தவர் தான் ஆசியம் மாள். இவர் கொங்கராயகுறிச்சியில் உள்ள உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 2ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன்பின்னர் தந்தையின் பணி மாறுதல் காரணமாகச் சென்னைக்குச் சென்று விட்டார். அங்கு 12 வரை படித்து முடித்தார். சிறிது காலத்தில் தந்தையின் உடல் நலம் சரியில்லை. எனவே ஆசியாவுக்குத் திருமணம் நடந்தது. அவரது கணவர் பெயர் மரக்காயர். தற்போது இவர் சங்கர் சிமெண்ட் கம்பேனியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
ஆசியா & மரக்காயர் தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆசியம்மாளுக்கு திருமணம் ஆன பின்னரே அவரது கணவரின் ஒத்துழைப்பால் காவல்துறை பணியில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி தற்போது உயர் பதவியை அடைந்துள்ளார்.
இவர் பணியாற்றிய இடமெல்லாம் நேர்மையான அதிகாரி என்று பாராட்டு பெற்றவர். தனது துறையில் மிகவும் கண்டிப்பான அதிகாரியும் வட. பல சூழல்களுக்கு மத்தியில் தொடர்ந்து பல்வேறு பட்டங்களை இவர் படித்து முடித்தார். எம்.எஸ்.சி, எம்.டெக் மற்றும் முதுநிலை வணிக நிர்வாகம் ஆகியபட்டங்களைபெற்றவர். ஆரம்பக் காலத்தில் மற்ற பணிகளில் கவனம் செலுத்தாமல் குரூப்- 1 தேர்வுகளை எழுதுவதில் கவனம் செலுத்தினார். இதில் தேர்ச்சி பெற்று முதன்முதலில் டி.எஸ்.பியாக பணியமர்த்தப்பட்டார். அதன்பின் பல்வேறு துறைகளுக்கு இவர் மாற்றப்பட்டார். இவரின் நேர்மை மற்றும் பணித்திறன் காரணமாக வேகமாக இவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. முதலில் வரதட்சணைக் கொடுமைத் தடுப்புப்பிரிவில் டி.எஸ்.பியாக இருந்தார். பின்னர் மகாபலிபுரத்தில் டி.எஸ்.பி, அதன்பின் சென்னையில் பல்வேறு இடங்களில் உதவி ஆணையர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் அரசியல் சார்பற்று இருந்த காரணத்தால் தொடர்ச்சியாக இவருக்குப் பதவி உயர்வு கிடைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பின் உளவுத்துறையில் சில காலம் பணியாற்றினார். பின்னர் ஊழல் தடுப்பு பிரிவில் சில காலம் பணியாற்றினார். தொடர்ந்து பல்வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டாலும் தொடர்ந்து பணித்திறன் காரணமாக இவருக்கு அடிக்கடி பதவி உயர்வும் வழங்கப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் எஸ்பியாக இருந்தவர் பின்னர் 4 வருடங்களுக்கு முன் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது உளவுத்துறை ஐ.ஜி. ஆகப் பதிவு உயர்வு பெற்றுள்ளார். முதல் முதலில் உளவுத்துறை ஐ.ஜி.ஆக ஒரு பெண் பதவி உயர்வு பெற்று இருப்பதும், தாமிரபரணி கரையில் பிறந்த ஒரு பெண்மணி இந்த உயர் பதவியைப் பெற்று இருப்பதும் இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கொங்கராயகுறிச்சியில் வசித்து வரும் அவரது தாய்மாமா ரகுமதுல்லா கூறும்போது, “எனது அக்காவிற்கு 5 பெண் பிள்ளைகள். இதில் மூத்தவர் தான் ஆசியம் மாள். தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் அவருக்கு விரைவில் திருமணம் செய்து கொடுத்தார்கள். ஆனால் அதன்பின்னர் தான் அவர் அனைத்து அரசு தேர்வுகளையும் எழுதினார். தற்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். இது அவரின் கடின உழைப்பிற்குக் கிடைத்த மரியாதை தான். என்று அவர் தெரிவித்தார்.
கொங்கராயகுறிச்சியில் வசிக்கும் ஆயிசா அவர்களின் உறவினர் கமல் பாஷா கூறும்போது, எங்கள் உறவினர் தற்போது காவல்துறையில் உயர் அதிகாரியாகப் பணி உயர்வு பெற்றிருப்பது எங்களுக்குப் பெருமை சேர்க்கிறது. இதன் மூலம் எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கும் பெண்களும் ஒரு ஊக்கம் தருகிறது என்று தெரிவித்தார்.
அதோடு மட்டுமல்லாமல் கொங்கராயகுறிச்சி கிராமத்தில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல் செய்துங்கநல்லூர், ஆறாம் பண்ணை, மியகான்பள்ளி, ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் உள்ள மக்களும் சந்தோசமடைந்துள்ளனர்.
நமது அருகில் உள்ள கிராமத்தினை சேர்ந்த ஒரு பெண் உயரிய பதவியை அடைந்திருப்பதும் , அதுவும் உளவுத்துறை ஐ.ஜியாக முதல் பெண்மணியாகப் பதவி உயர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
வாழ்த்துகள் ஆசியாயம்மாள் அவர்களே இந்த பதவிகளில் பெருமை பெற்று மேலும் பல பதவிகளை நீங்கள் பெற வேண்டும் என்று அன்போடு வாழ்த்துகிறது வணக்கும் திருவை – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


