ஸ்ரீவைகுண்டம் வல்லகுளம் ஊராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்ற வார்டு உறுப்பினர்களால் பரபரப்பு.
ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வல்லகுளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் 2வது வார்டு உறுப்பினர் ஜானகி அமுதா, 4வது வார்டு ராமலெட்சுமி, 5வது வார்டு கண்ணன், 6வது வார்டு சசிகலா, 7வது வார்டு சேகர், 9வது வார்டு உமாதேவி ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியருக்கு இணைதளம் வாயிலாக ஒரு புகார் மனு அளித்துள்ளனர்.
இதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத்தில் பஞ்சாயத்து தலைவியாக பணியாற்றி வருபவர் கமலம். ஆனால் அவருக்கு பதிலாக தலைவரின் உறவினர் இந்த பணியை செய்து வருகிறார். மேலும் பணியில் பொதுமக்களிடம் நானே தலைவர், ஓட்டு போட முடியாதவர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டும் தொனியில் பேசி வருகிறார். மேலும் ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. எனவே ஊராட்சி மன்றப் பணிக்கு இடையூறாக இருக்கும் ஊராட்சி தலைவர் உறவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்றைய தினம் மாலை வல்லகுளத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இந்த 6 வார்டு உறுப்பினர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதற்குள் சேரகுளம் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


