தூத்துக்குடி 4-ஆம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகளுக்காகச் சிறிது நேரம் மூடப்பட்ட நிலையில், கேட் சேதமடைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி 4-ஆம் ரயில்வே கேட் பகுதியில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் கேட் சிறிது நேரம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், “தூத்துக்குடி 4-ஆம் கேட் சேதமடைந்துவிட்டதால் தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் கேட் வழியே செல்லாமல் மேம்பாலத்தைப் பயன்படுத்திச் செல்லவும்” என்று தகவல்கள் பரவின.
இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது. இருப்பினும், இது வழக்கமான பராமரிப்புப் பணிக்காக மட்டுமே மூடப்பட்டது என்றும், கேட் சேதமடையவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவுவது முற்றிலும் வதந்தியே என்றும் தெரியவந்துள்ளது.


