எல்நினோ தாக்கத்தால் பருவமழை பாதிக்கப்படக் கூடும் என்ற அச்சம் நிலவி வருவதால், பயிர்களையும் மகசூலையும் பாதுகாக்கச் சொட்டு நீர்ப்பாசனம் உள்ளிட்ட நுண்ணீர் பாசனத் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்று வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக விளாத்திகுளம் உதவி வேளாண்மை இயக்குநர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோளம், கம்பு, மக்காச்சோளம், ராகி, தினை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பாசிப்பயறு, சூரியகாந்தி மற்றும் பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் நீர்ப்பற்றாக்குறை கடுமையாக ஏற்பட வாய்ப்புள்ளதால் நவீன பாசன முறைகளைப் பின்பற்றுவது அவசியமாகிறது.
பாரம்பரிய வெள்ளப் பாசன முறையைக் காட்டிலும், நுண்ணீர் பாசனம் (Micro-irrigation) மூலம் நீர் பயன்பாட்டுத் திறன் 85% வரை அதிகரிக்கிறது. இதன் மூலம் 48% நீர் வீணாவதைத் தடுக்க முடியும். நுண்ணீர் பாசனம் மூலம் கிடைக்கும் மகசூல் பாரம்பரிய முறையை விட 30% முதல் 50% வரை அதிகமாக இருக்கும்.
பாசன மோட்டார் இயங்கும் நேரம் குறைவதால் 30.5% வரை மின்சாரச் செலவு குறைகிறது. ஆவியாதல் 90% வரை தடுக்கப்படுகிறது. நீரில் கரையக்கூடிய உரங்களை நேரடியாக பயிர்களின் வேர்ப் பகுதிக்கு வழங்குவதன் மூலம் பயிர் வளர்ச்சி மேம்படுவதோடு, களைக் கட்டுப்பாடு மற்றும் மண் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
மத்திய அரசின் “ஒரு துளி நீர் – அதிக மகசூல்” திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு: சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன உபகரணங்களுக்கு 100% முழு மானியம் வழங்கப்படுகிறது. பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கப்படுகிறது. இயற்கைப் பேரிடர்களைத் தடுக்க முடியாவிட்டாலும், இத்தகைய நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் பாதிப்பைக் குறைக்க முடியும்.
எனவே, சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனத் திட்டங்களில் பதிவு செய்யவும், கூடுதல் விவரங்களைப் பெறவும் விவசாயிகள் விளாத்திகுளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகிப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


