தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள கோட்டநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி திருக்கோவிலில் ஆடி மாத கொடை விழா விமரிசையாக நடைபெற்றது.
கொடை விழாவை முன்னிட்டு ஸ்ரீ கள்ளழகர் மற்றும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு பல்வேறு நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் பூக்குழி இறங்கித் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
இக்கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூசாரி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் பூசாரி அழகர்சாமி கூர்மையான அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி அருட்பிரசாதம் வழங்கினார்.
இந்நிகழ்வைக் காண்பதற்காக விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்து, கோவிலில் வழங்கப்பட்ட அறுசுவை அன்னதானத்தில் பங்கேற்றனர்


