தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் தாலுகா, வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு கிராமத்தில் அமைந்துள்ள, சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீ திருக்கண்டீஸ்வரர் திருக்கோவிலில், தூத்துக்குடி ஸ்ரீ திருமூலநாதர் உழவாரப் பணிக்குழு மற்றும் வல்லநாடு அருள்மிகு ஸ்ரீ சாது சிதம்பர சுவாமிகள் தன்னார்வலர் குழு இணைந்து உழவாரப் பணி இன்று நடைபெற்று வருகிறது.
நாணல்காடு என்றால் சரவணப் பொய்கை என்று அர்த்தம். பழம் பெருமை வாய்ந்த இத் திருநாணல்காட்டில் உலகத்தார் வாழப் பாற்கடலில் தோன்றிய நஞ்சை தான் உண்டு ஸ்ரீ கண்டன் என்ற பெயரை தாங்கிய தியாகமூர்த்தி, இப்புண்ணிய தலத்தில் ஸ்ரீ சிவகாமி அம்மாளுடன் திருக்கண்டீஸ்வரராகஅருள் பாலிக்கிறார்.
இத் திருத்தலம் திருமண தடைகளை போக்கவும், குழந்தை பாக்கியம் அளிக்கவும் மற்றும் சனி தோஷங்கள் நீங்கவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
நவக்கிரகத்திற்கு பதிலாக சட்டைநாதர் இங்கு குடி கொண்டுள்ளார்.
பதிணெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டு சித்தர் இத் திருக்கோவிலில் தரிசித்து சென்றதாக வரலாறு உள்ளது. எனவே இத் திருக்கோவிலின் மேல்புறம் தாமிரபரணி ஆற்றங்கரையில் தனிக் கோவிலில் இடைக்காட்டு சித்தர் அவதரித்துள்ளார்.


