செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் ஆதிச்சநல்லூர் , தாமிரபரணி கரை, ஜமீன்தார் வரலாறு, மேற்குதொடர்ச்சி மலை, சித்தர்கள் வரலாறு என 53க்கு மேற்பட்ட நூல்களை பல்வேறு முன்னணி பதிப்பகத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை கருத்தில் கொண்டு தமிழ் வளர்ச்சி துறை தூத்துக்குடி மாவட்ட 2020க்கான தமிழ் செம்மல் விருதை அளித்தனர். இந்த விருதை கடந்த 1ந்தேதி சென்னை தலைமை செயலகத்தில் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் அப்போது தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டிய ராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜி, தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் விஜயராகவன் உள்பட பலர் இருந்தனர்.
விருது பெற்று தூத்துக்குடி மாவட்டம் வந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை பல்வேறு அமைப்பினரும் பாராட்டி வருகிறார்கள். ஸ்ரீவைகுண்டம் தாலூகா சார்பாக இவருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் சிவகுமார், மண்டல துணை வட்டாட்சியர் சங்கரநாரயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், செயலர் சங்கரபாண்டியன், செய்துங்கநல்லூர் வாசகர் வட்ட பொருளாளர் கோபால், தாதன்குளம் மரியதாஸ் பாஸ்டர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


