திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகத் வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும், வழக்கமான தரிசன நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் திருக்கோயில் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூருக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருக்கோயில் நடைமுறையின்படி இரவு 9.00 மணிக்குத் திருநடை சாற்றப்பட வேண்டும்.
இருப்பினும், கூட்ட நெரிசல் அதிகமுள்ள நாட்களில் மாலை 6.30 மணிக்கு மேல் கட்டணத் தரிசன வரிசையிலும், இரவு 7.00 மணிக்கு மேல் பொது தரிசன வரிசையிலும் பக்தர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவதால், அனைவரும் தரிசனம் செய்து முடிக்க நள்ளிரவு 12.00 மணிக்கு மேலாகிவிடுகிறது.
இதனால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவும், இரவு 9.00 மணிக்குள் திருநடையைச் சாற்றும் வகையில் வரிசைகளை முறைப்படுத்தவுமே அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது:
கட்டணத் தரிசனம்: மாலை 6.30 மணி வரை வரிசையில் அனுமதி.
பொது தரிசனம்: இரவு 7.00 மணி வரை வரிசையில் அனுமதி.
மாலை 6.30 மற்றும் இரவு 7.00 மணிக்கு வரிசையில் நுழையும் பக்தர்கள், இரவு அபிஷேகத் தாமதங்களைக் கடந்து தரிசனம் முடித்துத் திரும்ப இரவு 9.00 மணி ஆகிவிடும் என்பதைக் கருத்தில் கொண்டே இந்த உள்நுழைவு நேரம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் செய்தித் தொலைக்காட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “திருச்செந்தூர் செல்லும் பக்தர்களே உஷார்! இனி இந்த நேரத்திற்கு மேல் தரிசனம் கிடையாது” என்ற தலைப்பில் தரிசன நேரம் குறைக்கப்பட்டுவிட்டது போலத் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது.
தங்கள் தொலைக்காட்சியின் தரவரிசை மதிப்பீட்டை (TRP) உயர்த்திக் கொள்வதற்காக உண்மையை திரித்து வெளியிட்ட இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது. பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


