தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கோரம் பள்ளம் குளத்திலிருந்து 20 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25ம் தேதி காலை முதல் இரவு வரை நீடித்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. தொடர் மழை, காடாற்று வெள்ளத்தால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் கயத்தாறு, கழுகுமலை, கடம்பூர், மணியாச்சி, சீவலபேரி, ஒட்ட நத்தம், செக்காரக்குடி, தளவாய் புரம், ஒட்டப்பிடாரம் பகுதியில் பெய்த மழையால் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோரம் பள்ளம் குளத்திற்குத் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி 24 மதகுகள் கொண்ட கோரம் பள்ளம் குளத்தில் 20 மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் அத்திமரப்பட்டி, கோரம் பள்ளம் சாலையில் உள்ள தாம்போதி பாலம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. அவ்வழியாக பொதுமக்கள் செல்லாதவாறு பேரிகார்டு மூலமாகத் தடுப்பு ஏற்படுத்தி முத்தையா புரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்திமரப்பட்டி- கோரம் பள்ளம், காலாங்கரை, பெரியநாயகிபுரம், வீரநாயக்கன்தட்டு ஊர்களுக்கிடையே போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. அவ்வழியே செல்லும் வாகனங்கள் திருச்செந்தூர் சாலை வழியாகச் சுற்றிச் சென்றது.
கோரம் பள்ளம் குளத்தைச் சுற்றியுள்ள அத்திமரப்பட்டி, காலாங்கரை,வீரநாயக்கந்தட்டு, குலையன்கரிசல், கோரம் பள்ளம், பொட்டல்காடு உள்ளிட்ட பகுதிகளில் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வா¬-ழ உள்ளிட்டவை தண்ணீரில் மூழ்கியது. கோரம் பள்ளம் குளத்திலிருந்து உப்பாற்று ஓடை வழியாகத் தண்ணீர் அதிகளவில் வெளியேறிக கொண்டிருப்பதால் விவசாய நிலங்களில் இருந்து வடிகால் மூலமாகத் தண்ணீர் வெளியேற்ற முடியாத
சூழல் உருவாகியுள்ளது. உப்பாற்று ஓடையில் செல்லும் உபரிநீர் வீரநாயக்கத்தட்டு செல்லும் சாலையை மூழ்கடித்துச் செல்கிறது. இதனால் வீரநாயககத்தட்டு, முட்டுக்காடு பகுதியைச் சுற்றியுள்ள உப்பளங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. இதனால் உப்பளத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மே-லும் அம்பாரம் அமைத்துச் சேகரித்து வைத்திருந்த உப்பையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
நேற்று முன்தினம் மழை பெய்து கொண்டிருந்த போது இடி, மின்னல் அதிகமாகக் காணப்பட்ட-து. இதனால் -முத்தையா புரம் பகுதியில் உள்ள வீடுகளிலிருந்த மின்சாதன பொருட்களான பேன், தொலைக்காட்சி, பிரிட்ஜ், மிக்ஸி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது. மின் ரீடிங் மீட்டரும் எரிந்து சேதமடைந்தது.
கோரம் பள்ளம் குளம், அத்திமரப்பட்டி- கோரம் பள்ளம் இணைப்பு தாம்போதி பாலம் ஆகியவற்றைப் பார்வையிட்ட அமைச்சர் கீதா ஜீவன் உபரிநீரை வெளியேற்றவும், பொதுமக்களை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அவருடன் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.