இந்த பெயர் 1988 ஆம் ஆண்டு நம் மக்கள் மத்தியில் பிரபலமானது. தேவி வார இதழில் பட்டிமன்ற பேச்சாளர் பொ.ம.ராஜமணி அய்யா அவர்களின் பேச்சை கேட்டு தொகுத்து எழுதியவர் இவர். அந்த தொடர் இயல்பாக, மிகமிக மென்மையான வார்த்தைகளை கொண்டு, படித்தவுடன் சிரிக்க வைத்து விடுகின்ற அருமையான தொடர்.
அப்போது அய்யாவுக்கு மிஞ்சி போனால் 25 வயது இருக்கலாம். அப்போதே மிக துடிப்பாக எழுதி கொண்டிருந்தார்.
காலங்கள் கடந்தது.
நான் தினகரன் நாளிதழில் பகுதிநேர நிருபராக பணியாற்றி கொண்டிருந்தேன். ஆனாலும் சிறப்பு மலர் உருவாக்கத்தில் நெல்லை கவிநேசன் அய்யாவின் தலைமையில் நாங்கள் கட்டுரையாளராக பணிபுரிவோம். அப்போது எழுதிய பல கட்டுரைகள், மலர்கள் எனது நூலுக்கு இன்றளவும் உறுதுணையாக விளங்குகிறது. அவரின் கீழ் பணியாற்றிய அந்த காலங்கள் பொற்காலம்.
தொடர்ந்து அவர் தினத்தந்தியிலும் எழுத ஆரம்பித்தார். அதுவும் மிகப்பெரிய தொடர்கள் வெளிவந்து அவை நூலாக உருவாகியது.
இவ்வேளையில் தான் அய்யா அவர்கள் ஆதித்தனார் கல்லூரியில் தமிழ்த்துறை அல்லாத வேறு துறையில் பணியாற்றுகிறார் என அறிந்தேன்.
உண்மையிலேயே மிக சந்தோஷமாக இருந்தது.
தொடர்ந்து இன்றளவும் திருச்செந்தூர் கல்லூரியில் இருந்து சிறப்பாக நெல்லை கவிநேசன் அய்யா செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் பல விருதுகளை பெற்று வருகிறார்.
மேலும் தினத்தந்தி 75வது ஆண்டு விழா மலரில் இவரது கவிதை வெளிவந்தது. இவர் எழுதும் அனைத்து நூல்களுமே, வாலிபர்கள், வருங்கால சந்ததிகளுக்கு தேவையான முன்னேற்ற தூண்டுதல்களை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.
அய்யாவின் தொடர்கள் பல ஊடகங்களில் வந்து நம்மையெல்லாம் வியக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
பெரும்பாலுமே மலை பயணம் என்ற தலைப்பில் நான் எழுதினால் நூற்றுக்கணக்கான மலைகளில் ஏறி வித்தியாசமாக எழுதலாம். தாமிரபரணியை தொட்டு எழுதினால் பல ஊர்கள், தெருக்களை பற்றி எழுதிவிடலாம். ஜமீன்தார்களை எழுதினால் கூட, வித்தியாசமாக வித்தியாசமாக ஜமீன்தார் குறித்து எழுதி கொண்டே போகலாம்.
ஆனால் ஐ.ஏ.எஸ் தேர்வு மற்றும் மாணவர்களின் முன்னேற்றம் என தலைப்பை மையமாக வைத்து தொடர்ந்து நூல் எழுத முடியுமா?.
50 நூல்களுக்கு மேல் எழுதி விட்டாரே. இது எப்படி சாத்தியமானது.
பிரமிப்பாகத்தான் இருக்கிறது.
எனவே தான் பாளையங்கோட்டை நூலகத்தில் நடந்த விழாவில் வாசகர் வட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு வித்திட்ட வகைக்காக இவரை தேர்ந்தெடுத்து சிறந்த எழுத்தாளருக்கான விருதை வழங்கி பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அந்த நிகழ்ச்சியில் நானும் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சி துவக்கத்தில் அய்யா அவர்கள் அருமையான உரை ஒன்றை நிகழ்த்தினார். இவர் எழுத்தாளர் மட்டுமல்ல நல்ல பேச்சாளர் என்பதையும் அன்று தான் நான் அறிந்து கொண்டேன். தமிழ்நாடு முழுவதும் அனைத்து கல்லூரியில் சென்று மாணவர்களை ஊக்குவித்து வருகிறவர் அல்லவா. அவருடைய பேச்சு மிகத்திறமையாகத் தானே இருக்கும்.
இந்த விருதை அவருக்கு வழங்கிய பாளையங்கோட்டை நூலகர்களுக்கும், வாசகர்கள் வட்ட நிர்வாகிகளுக்கும் இவரை தேர்ந்தெடுத்த வகைக்கு மிக்க நன்றி… அய்யா நெல்லை கவிநேசனின் புகழ் என்றென்றும் வாழ்க.
தொடர்பானவை
December 9, 2023
November 19, 2021