அய்யா ரத்னவேல் பாண்டியன் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார்கள். ஆனாலும் திருப்புடை மருதூர் கோபுரம் இருக்கும் வரை அவர் புகழ் மறையாது.
நான் நதிக்கரையோரத்து அற்புதங்கள் தொடரை நெல்லை தமிழ் முரசியல் எழுதும்போது
139 வது பகுதியாக ‘திருப்புடைமருதூரில் வாழும் சரித்திரம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். அந்த கட்டுரை பிற்காலத்தில் தலைத்தாமிரபரணி என்ற பெயரில் காவ்யா பதிப்பகம் நூலாக வெளியிட்டது. அந்த நூல் அனைத்து நூலகங்களிலும் உள்ளது. அதில் நாம் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் குறித்து எழுதியதை அவர் நினைவாக இன்று உங்களிடம் தெரிவிக்கிறேன்.
இந்தியாவின் தலைச் சிறந்தக் குடிமகனாய் தேர்ந்தெடுக்கப்பட்டு சேவையின் பிறப்பிடமாய் உலகச் சமாதான புறாவாய் நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவின் கையால் விருது பெற்ற நதிக்கரையில் வாழும் சரித்திரமாய்… கோபுரமாய் உயர்ந்து நிற்கும் ஒரு அற்புத மனிதரைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.
அந்த அற்புதமான மனிதரைக் காண திருப்புடைமருதூர் சென்ற போது…
அங்கு ஓய்வாகச் சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்த அந்தச் சாதனையாளர் குள்ள உருவத்தில் தமிழருக்கே உரிய அழுத்தமான கறுமை நிறத்தில் மிகவும் எளிமையாக ஊர் மக்களிடம், அதுவும் ஏழை எளிய மக்களிடம் கோவிலுக்கு எல்லாம் ஒழுங்கா போய் சாமி கும்பிடணும் என்று அன்போடு பேசும் அந்த அற்புத மனிதரைப் பார்த்தோம். இவர்…
தாமிரபரணி நதிக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம். இன்று அத்தாளநல்லூர் பெருமாள் கோவிலும், திருப்புடைமருதூர் சிவன் கோவிலும் இந்த அளவுக்கு மிக பிரமாண்டமாக இருக்கிறது என்றால் அதற்கு வித்து இந்த மாமனிதர்தான் யார் அவர்?
உங்களுக்கு புரிந்து இருக்கும். ஆம்! அவர் தான். உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன். அந்த வாழும் சரித்திரத்தைப் பார்த்தேன். அவரிடம் தாமிபரணி கரையில் வாழும் பெரியவர்கள் பற்றி பேசினோம்.கல..கல..வென்று பேசினார். அவர் கூறியதாவது.
திருப்புடைமருதூர் அருகே உள்ள ஸ்ரீபற்பநாதநல்லூர் சேர்ந்தவர்தான் முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் ரகுநாத் ஐ.ஏ.எஸ். அவருடைய தந்தை சென்னை மாநகர் முதல் கல்லி அதிகாரி அவருடைய தாத்தா ஐ.சி.எஸ். ஆக முதன்முதலில் பணியாற்றியவர்.
அத்தாளநல்லூரைச் சேர்ந்த ஜெயகாந்தன் பாரதி ஐ.ஏ.எஸ். அதிகாரி, அரிகேசவநல்லூர் பாலகிருஷ்ணன் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. அவர் மனைவி ஷீலா பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு முதன்மை செயலாளராகப் பதவி வகித்தவர் என அடுக்கிக் கொண்டே போனார்.
திருப்புடைமருதூர் முன்னேற்றதுக்கு மிக முக்கியக் காரணமான நீதிபதி ரத்தினவேல் பாண்டியனைப் பற்றி நிலக்கிழார் முருகையாபாண்டின் கூறியதாவது.
கடந்த 21&3&2000 &ல் காஷ்மீர் சிட்டிசிங்புரா என்ற இடத்தில் வைத்து தீவிரவாதிகள் அப்பாவி சீக்கியர்கள் 36 பேரை சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்க அதிபர் பில்கிளிண்டன் இந்தியா சுற்றுப்பயணம் வந்தப் போது நடந்தச் சம்பவம் அதன்பிறகு 4 நாட்கள் கழித்து அங்கியிருந்து 13 மைல் மேற்கே பரகீபுரா என்ற இடத்தில் போலீசாரால் 5 பேர் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டு அவரசம் அவசரமாகப் புதைக்கப்பட்டனர்.
இப்படி புதைக்கப்பட்டவர்கள் தீவிரவாதிகள் அல்ல. அப்பாவி குடிசைவாசிகள் என்று கிளர்ச்சி ஏற்பட்டது. இதனால் சம்பவம் நடந்த அனந்தநாக் மாவட்டத்துக்கு எதிராக உத்திரசூர் மற்றும் பராரியாஸ் கிராமங்களில் இருந்து 2000 பேர் திரண்டு ஊர்வலம் வந்த போது போலீஸ் சுட்டதால் 8 பேர் மரணமடைந்தனர்.
இந்த வேளையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுக் காண ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமனம் செய்து அறிக்கைச் சமர்ப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்ட, காஷ்மீர் அரசு ரத்தினவேல் பாண்டியனை நியமனம் செய்தது. ஆற்றல் மிகுதியுடன் அவர் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் தரப்பு, போலீஸ் தரப்பு என இரு தரப்பிலும் விசாரணை நடத்தி மருத்துவப் பிரேதப் பரிசோதனை,மருத்துவச் சான்றிதழ் மற்றும் எல்லா ஆதாரங்களையும் சேகரித்து போலீஸ் தரப்பிலும், மக்கள் தரப்பு விளக்கத்தினைக் கேட்டு அதன் அடிப்படையில் 255 பக்கத்துக்கு அறிக்கைத் தயார் செய்து காஷ்மீர் மாநில முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் தாக்கல் செய்தார்.
இதில் பரக்பூரா துப்பாக்கி சூட்டில் இறந்த 8 பேரும் அப்பாவி பொதுமக்கள் தான். அதில் தீவிரவாதிகள் யாரும் கிடையாது. அதனால் இறந்த அப்பாவிகள் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் மாநில அரசு உடனடியாக 8 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான 7 போலீசார் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு போட வேண்டும். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கை, கால், பாதிக்கப்பட்டு ஊனமுற்ற அப்பாவிகளுக்கு அரசு கருணை அடிப்படையில் அரசு வேலை தர வேண்டும் என்ற அவரது அறிக்கை காஷ்மீர் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது மட்டுமல்லாமல் அவரின் அறிக்கையை உலகமே பாராட்டியது. இவரின் திறமையானச் செயல்பாட்டைக் கண்ட முதல்வர் பரூக் அப்துல்லா பராக்பூராவில் 5 பேர் கொன்று புதைக்கப்பட்டச் சம்பவம். 36 சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கமிஷனை நியமித்து அதற்கும் இவரை தலைவராகப்பணியாற்ற கேட்டுக் கொண்டார்.
அது மட்டுமல்லாமல் இப்பணிக்காக ரத்தினவேல் பாண்டியனுக்கு அரசு கொடுத்த சம்பளம் சுமார் 1 1-/2 லட்சத்தைத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கே கொடுத்து விட்டார். இவரின் சிறப்பு மிகு சேவை மூலம் தாமிரபரணி கரை மைந்தனின் புகழ் உலகமெங்கும் பரவியது. சிறப்பு மிக்க இவர் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டினார்கள்.
நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா அமைக்க அறிக்கைச் சமர்ப்பித்தவர் இவரே. இவர் இந்தியாவில் 5&வது ஊதிய குழுத் தலைவராக இருந்துள்ளார். இந்தியத் தொழில் வளர்ச்சி குழுவில் சேர்மனாக இருந்துள்ளார். மாணவர் சேர்க்கை கமிட்டியின் சேர்மனாக இருந்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தி.மு.கவில் நெல்லை மாவட்ட செயலாளராக இருந்துள்ள இவர் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர்.
அத்தாளநல்லூர் போன்ற தாமிரபரணி ஸ்தலம் உலக அளவில் வெளியே தெரிகிறது என்றால் அதற்கு காரணம் இந்த மாமேதை தான். அது மட்டுமல்லாமல் தாமிரபரணி நதி மீது தீராத பற்றுக் கொண்டவர் இவர்.
இவருக்கு 93&94&ஆம் ஆண்டில் தேசிய மூத்தக் குடிமகன் விருதை அன்னை தெரசா கையால் பெற்றவர்.
இனி இவர் வாழ்க்கை வரலாறு குறித்து பார்ப்போம். இவர் 13&3&1929&ல் திருப்புடைமருதூரில் சுப்பையா & காவேரி தம்பதிகளுக்கு மகனாய் பிறந்தவர்.
இவர் பிறந்த மறுநாளே தாயார் காவேரி மண்ணுலகில் இந்த மகனை விட்ட சந்தோஷத்துடன் விண்ணுலகில் கலந்து விட்டார். தாயை இழந்த இந்தச் சிறு பிஞ்சு கதறியது. ஆதரவாய் குழந்தையைத் தொட்ட தந்தையின் கண்ணீரும் திருப்புடைமருதூர் மண்ணை நனைத்தது.
ஆதரவுடன் அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கண்ணீர் மல்கத் தொட்டத் தந்தை சுப்பையா, மகனுக்கு அன்று முதல் தனது பாட்டி நல்லத்தாய் அம்மாளும், பெரியப்பாவின் மகள் பாப்பாத்தி அம்மாளும் ரத்தினவேல் பாண்டியனை வளர்த்து ஆளாக்கினார்கள்.
முதலில் ஆரம்பப் பாடசாலை கல்வியை திருப்படைமருதூர் தொடக்கப்பள்ளியிலும், பின் வீரவநல்லூர் வண்டிமலைச்சியம்மன் கோவில் பின்புறமுள்ள திருவள்ளுவர் பள்ளியிலும் படித்தார். அதன் பின் அம்பை தீர்த்தபதி பள்ளியில் உயர்கல்வியை முடித்தார். நெல்லை எம்.டி.டி. இந்துக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார்.
அப்போதெல்லாம் சட்டப்படிப்பு முடிந்தவுடன் வக்கீலாகி விட முடியாது. ஒரு வருடம் வழக்கறிஞரிடம் பணியாற்ற வேண்டும். ஆகவே நாராயணசாமி முதலியார் என்ற வழக்கறிஞரிடம் ஜீனியராகச் சேர்ந்தார். முதல் குட்டு மோதிரக் கையால்பட வேண்டும் என்று சொல்வார்கள். அவர் சாதாரண ஆள் கிடையாது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் சட்ட அமைச்சராகப் பணிபுரிந்தவர்.
அவரிடம் தான் ஜீனியராக ரத்தினவேல் பாண்டியன் பணிபுரிந்தார். அதன்பின் தான் வழக்கறிஞராக மாறி பின் படிப்படியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று தாமிரபரணி மண்ணுக்கு புகழ் சேர்த்தார். அதோடு மட்டுமல்லாமல் பெரிய பெரிய நல்ல வசதியான உள்ளங்களுடன் தொடர்பையும், விசுவாசத்தையும் கொண்டு அத்தாளநல்லூர் பெருமாள் கோவில், திருப்புடைமருதூர் சிவன் கோவிலும் திருப்பணிகளைச் செய்தார்.அதில் திருமதி பிரியம்வதா பிர்லா அம்மையாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய பணக்காரார் பிர்லா குடும்பத்தினை சேர்ந்தவர்.
அதுமட்டுமல்லாமல் திருப்புடைமருதூரை மாதிரி கிராமமாக அமைக்க இவர் எடுத்து வரும் முயற்சி தற்சமயம் நடந்து வருகிறது. இவருக்கு சுப்பையா, ரவிசந்திரன், சேகர், கந்தசாமி, காவேரி மணியன் ஆகிய மகன்களும் லட்சுமி என்ற மகளும் உள்ளனர். தேசிய மூத்தக் குடிமகன் விருது பெற்ற ரத்தனவேல் பாண்டியன் தற்சமயம் எந்தப் பரபரப்பும் காட்டாமல் மேலும் சாதிக்கும் திறனுடனும் வருங்காலத்தில் திருப்புடைமருதூர் முன்னேற்றத்திற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்து வருகிறார்.
குள்ள மாமுனி அகத்தியர் பொதிகை மலையில் தோன்றிச் செய்த அற்புதங்கள் பலப்பல. அவர் பல பெயர்களில் பல ரூபங்களில் வாழ்ந்து வருவதாக ஐதீகம் கூறுகிறது.இங்கே ரத்தினவேல் பாண்டியனின் உருவத்தையும், தீர்க்கமான முடிவையும் பார்க்கும் போது வாழும் அகத்தியராகவே அவரைப் பார்த்தோம். இனி.. அவர் மூலமாக மற்றொரு அபூர்வ மேதையைப் பற்றி அறிந்தோம்.
என்று எழுதியிருந்தோம். தலைத்தாமிரபரணியில் 498 வது பக்கத்தில் இவரது வரலாற்றை எழுதியுள்ளேன்.
அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.