
குழந்தைகள் எவரும் சாதியுணர்வோடு பிறப்பதில்லை. அவர்கள் வளர்கிற குடும்பம், கேட்கிற உரையாடல்கள், பார்க்கும் சமூக உறவுகள் ஆகியவற்றின் வழியாகவே அந்த உணர்வு அவர்களுள் வேரூன்றுகிறது.
பள்ளி என்பது அத்தகைய மனப்போக்கை மாற்றவும், செம்மைப்படுத்தவும் வாய்ப்புள்ள மிகச்சிறந்த சமூக இடம்.
ஒரு ஆசிரியராக எனது பள்ளி வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் வழியாக, சாதியின் வேர்கள் எங்கு
பதிந்திருக்கின்றன என்பதை இக்கட்டுரையின் மூலம் புப்படுத்த முயல்கிறேன்.
குடும்பச் சூழல்
*******
குழந்தைகள் சாதி என்ற சொல்லின் பொருளைக்கூட அறியாத பருவத்திலேயே, அதன் அடையாளத்தைச் சுமந்தபடி வளரத் தொடங்குகின்றனர். அந்த அடையாளம் அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றுவதற்கு முதன்மையான காரணம் அவர்கள் வளரும் குடும்பச் சூழலே ஆகும்.
குடும்பங்களில் சாதிப் பெருமை பேசிப் பேசிக் குழந்தைகள் வளர்க்கப்படும்போது, அதன் தாக்கம் பள்ளியிலும் இயல்பாகவே வெளிப்படுகிறது.
தாங்கள் சார்ந்த சாதியைச் சேர்ந்த மாணவர்களுடனேயே பழக வேண்டும், அவர்களுடனேயே நட்பு கொள்ள வேண்டும் என்ற மனப்போக்கு தானாகவே உருவாகிறது. “அவன் நம்ம ஊர்க்காரன்”, “இவன் இன்ன சாதியைச் சேர்ந்தவன்”, “அவர்கள் நம்மைவிட மேல்சாதி”, “இவர்கள் கீழ்சாதி” என்ற எண்ணங்கள் அவர்களது உரையாடல்களிலும் நடத்தையிலும் பிரதிபலிக்கத் தொடங்குகின்றன.
பள்ளிச் சூழல்
*******
சாதி என்பது மனிதனைப் பிரிப்பதற்கான அளவுகோல் அல்ல என்பதை ஆசிரியர்கள் எவ்வளவு எடுத்துரைத்தாலும், குடும்பத்தில் ஆழமாக விதைக்கப்பட்ட நம்பிக்கைகள் சில மாணவர்களிடம் எளிதில் மாறுவதில்லை.
ஆசிரியரின் கருத்துகளையே தவறாகப் புரிந்துகொண்டு, “இவர் இப்படிப் பேசுவதற்கும் ஏதோ ஒரு சாதிக் காரணம் இருக்கும்” என்ற அறியாமையான எண்ணத்தில் அறிவுரைகளை அலட்சியப்படுத்தும் நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு நடந்து கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தாலும், அவர்கள் தங்களது எண்ணங்களை மற்ற மாணவர்களிடமும் பரப்ப முயல்வது கவலைக்குரியதாகும்.
மாறாக, குடும்பங்களில் சாதிப் பாகுபாடின்றி வளர்க்கப்படும் குழந்தைகள், பள்ளியில் சமத்துவம், மனிதநேயம், ஒற்றுமை போன்ற மதிப்புகளை எளிதில் ஏற்றுக்கொள்கின்றனர்.
ஆசிரியர்களின் அறிவுரைகளையும் மனமுவந்து ஏற்று, அனைவருடனும் இயல்பாகப் பழகுகின்றனர்.
ஆனால், அதுகுறித்து அவர்களது பெற்றோர்களுடன் பேசும்போது எதிர்பார்த்த பலன் எப்போதும் கிடைப்பதில்லை. காரணம், பல பெற்றோர்களுக்கே தங்களது குழந்தைகளின் சாதிப்பற்று ஒரு குறையாகத் தெரிவதில்லை; மாறாக, அது இயல்பான ஒன்றாகவே தோன்றுகிறது.
இந்த உண்மையை எனக்கு மிகவும் ஆழமாக உணர்த்திய ஒரு சம்பவம் ஒன்று, நான் பணியாற்றும் பள்ளியில் நிகழ்ந்தது.
எட்டாம் வகுப்பில் பயின்ற இரண்டு மாணவர்கள் மதிய இடைவேளையில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. வகுப்பாசிரியர் இருவரையும் அழைத்து அமைதியாகப் பேசி, சமரசம் செய்து வீட்டிற்கு அனுப்பிவைத்தார். அன்றைய நிகழ்வு அதோடு முடிந்துவிட்டதாகவே நாங்கள் நினைத்தோம்.
ஆனால், மறுநாள் காலை அந்த மாணவர்களில் ஒருவன் தனது பாட்டியுடன் பள்ளிக்கு வந்தான். பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தவுடனேயே அந்த மூதாட்டி கடும் கோபத்துடன் உரத்த குரலில் பேசத் தொடங்கினார்.
“என் பேரனை ஒரு கொறைஞ்ச சாதிக்காரன் அடிச்சிருக்கான். அவனை நான் பார்த்தாகணும்!”
என்று அவர் எழுப்பிய கூச்சல், அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
அவரை அமைதிப்படுத்த நாங்கள் முயன்றும் முடியவில்லை.
“இரண்டு குழந்தைகளும் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு விளையாடிக் கொண்டபோது ஏற்பட்ட சிறு பிரச்சனைதான் இது.வேறெந்த பிரச்சனையும் இல்லை. நேற்றே அவர்களைப் பேசி சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தோம். குழந்தைகளுக்குள் இதுபோன்ற சிறிய சண்டைகள் நடப்பது இயல்புதானே!” என்று பொறுமையாக எடுத்துரைத்தோம்.
ஆனாலும், எங்களது எந்த விளக்கமும் அவருடைய கோபத்தைத் தணிக்கவில்லை.
“எது சின்னச் சண்டை? இன்ன சாதிக்காரன் எப்படி எம் பேரனை அடிக்கலாம்? என்ன பேசுறீங்க டீச்சரம்மா?” என்று ஆவேசத்துடன் அவர் மீண்டும் மீண்டும் வாதிட்டார்.
எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவர் சமாதானமடையவில்லை.
“என் கண் முன்னால அந்தப் பையனை என் பேரன் ஒரு அடியாவது அடிக்கணும்; அப்போதுதான் நான் போவேன்” என்று பிடிவாதமாக நின்றார்.
அப்போது அவருடைய மனநிலையை மாற்றும் நோக்கில் நான் சற்று அமைதியாகவள கேட்டேன்….
“அம்மா, ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு உங்களது முன்னோர்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்தபோது, அக்காலச் சமூக அமைப்பில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளை அனுபவித்திருக்கிறார்கள். அவை பற்றித் தெரியும் தானே?” என்று.
“அதுக்கு இப்போ என்ன?” என்ற ஒரே கேள்வியை அவர் திருப்பிக் கேட்டார். அதற்கு மேல் எதையும் கேட்க விரும்பாதவரைப் போல, தனது பேரனை அழைத்துக்கொண்டு என்னையும் திட்டிக்கொண்டே பள்ளியை விட்டு வெளியேறினார்.
அவர் சென்ற பிறகும், நீண்ட நேரம் என் மனதில் ஒரே கேள்விதான் ஓடிக்கொண்டிருந்தது.
இத்தகைய குடும்பச் சூழலில் வளரும் குழந்தைகளால், சாதியற்ற ஒரு சமூகத்தை எப்படி உருவாக்க முடியும்?” என்பதுதான் அது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த மாணவனின் தாயிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
“டீச்சர்… எங்க அம்மா ஏதாவது தப்பாப் பேசியிருந்தா மன்னிச்சிருங்க. அவங்க அப்படித்தான். எப்போதும் சாதியைப் பற்றித்தான் பேசுவாங்க. அவங்கள திருத்த முடியாது. ஆனால் நாங்க அப்படி இல்ல டீச்சர். எங்க பிள்ளைகளையும் அப்படி வளர்க்க விரும்பல. நானும் அந்தப் பள்ளியில்தான் படிச்சேன். என் பெயர் சுமதி…” என்றாள்.
அப்பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டபோதுதான் என் மனம் சற்று அமைதியடைந்தது. ஒரே குடும்பத்திற்குள்ளேயே தலைமுறைகளுக்கு இடையில் சிந்தனையில் மாற்றம் நிகழ முடியும் என்ற நம்பிக்கை மீண்டும் எனக்குள் வலுப்பெற்றது.
இன்றைய சமூகத்தில் சாதி என்பது பழைய வரலாற்றின் எச்சமாக மட்டும் இல்லை; பல வடிவங்களில் புதிய முகங்களோடு தொடர்கிறது. ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள்கூட தங்களுக்குள் பல உட்பிரிவுகளை உருவாக்கி, உயர்வு–தாழ்வு என்ற மனப்போக்கை வளர்த்துக் கொள்வதைக் காண முடிகிறது. இத்தகைய ஆதிக்க எண்ணங்களே, பள்ளிகளில் வளரும் குழந்தைகளின் மனங்களிலும் மெல்லப் பதிகின்றன.
அதனால், சாதியைப் பற்றிய விழிப்புணர்வு என்பது பெரியவர்களுக்கான உரையாடலாக மட்டுமே இருக்க முடியாது. குழந்தைகள் வளர்கிற குடும்பம், அவர்கள் கற்கும் பள்ளி, அவர்கள் பார்க்கும் சமூகச் சூழல் ஆகிய அனைத்திலும் ‘சமத்துவம்’ என்பது வாழ்வியல் பண்பாக வெளிப்பட வேண்டும்.
குடும்பத்தில் தவறாக விதைக்கப்பட்ட எண்ணங்களை மாற்றும் ஆற்றல் கல்வியின் வழியே பள்ளிகளுக்கு உண்டு. அதனால்தான் ஆசிரியரின் பணி பாடங்களைக் கற்பிப்பதைத் தாண்டி, மனிதநேயத்தை வளர்ப்பதாகவும் அமைகிறது.
குழந்தைகளின் மனதில் சாதியின் விதைகள் விழாமல் காக்கும் பொறுப்பு குடும்பத்திற்கும், பள்ளிக்கும், சமூகத்திற்கும் சமமாக உள்ளது. அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்படும் நாளில் தானாகவே சமத்துவம் மனித மனங்களில் மலரத் தொடங்கும். அன்றுதான், மனிதநேயத்தின் வேர்கள் இந்த மண்ணில் மேலும் ஆழமாகப் பதியத் தொடங்கும்.
_ முனைவர் த.ஜான்சிபால்ராஜ்
எழுத்தாளர்,
ஆசிரியர்.


