செய்துங்கநல்லூர் அருகே தூதுகுழி குளம் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலமாக கருங்குளம், செய்துங்கநல்லூர் தூதுகுழி பகுதியில் உள்ள விவசாயிகள் பலன் பெறுகிறார்கள். இந்த குளத்தில் பிசானம், கார் ஆகிய சாகுபடிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் அணையில் போதிய தண்ணீர் திறக்கப்படாத காரணத்தினால், தற்போது பிசான சாகுபடி மட்டுமே நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு என்று முன்கார் சாகுபடி எனும் பழந்தொழி சாகுபடி உண்டு. ஆனால் இந்த குளத்து விவசாயிகள் அந்த சமயத்தில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு தூதுகுழி குளத்தில் வெள்ளரிக்காய் சாகுபடி துவங்கி விட்டது. நாற்று நடவு பணி துவங்கி 15 நாள்களில் களை பறிக்கும் பணி துவங்கி விட்டது. வருகிற 20 நாள்களில் வெள்ளரிக்காய் காய்க்க துவங்கி விடும். விவசாயிகள் இந்த வெள்ளரி பிஞ்சை உடனுககுடன் பறித்து நெல்லை திருச்செந்தூர் சாலையில் வைத்து விற்பார்கள். இந்த விற்பனைக்கு கடும் கிராக்கி உண்டு.
இந்த வெள்ளரிக்காய் நல்ல சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதால் இந்தபகுதியில் செல்பவர்கள் மொத்தமாக வெள்ளரிக்காய் வாங்கி செல்வார்கள். இதனால் சுமார் 50 க்கு ம் மேற்பட்ட விவசாயிகள் சாலையின் இருபுறமும் நின்று வியாபாரம் விற்பார்கள்.
இந்த ஆண்டு கொளுத்தும் வெயிலுக்கு இடையே கடந்த 2 நாள்களுக்கு முன்பு கோடை மழை பெய்தது. இந்த மழை வெள்ளரிக்காய் விளைச்சலுக்கு மிக உதவியாக இருந்தது. இதனால் வெள்ளரிகாய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நாசரேத்தை சேர்ந்த வின்சென்ட் கூறும்போது, நாங்கள் ஏபரல் மே மாதங்களில் கருங்குளம் பகுதி வெள்ளரிக்காயை ஆர்வத்துடன் வாங்கி செல்வோம். ஆனால் இந்த முறை வெள்ளரிக்காய் விளைச்சல் கொஞ்சம் தள்ளி போய் விட்டது. மே மாதம் முதல் வாரம் வெள்ளரிக்காய் விவசாயிகள் விற்பனைக்கு வெள்ளரிக்காய் வரும் என கூறினார்கள். நாங்கள் ஆவலோடு காத்து இருக்கிறோம். மே மாதம் இங்கு வந்து மொத்தமாக வெள்ளரி பிஞ்சு வாங்கி செல்வோம் என்றார்.
சுவையான வெள்ளரிக்காய், வாங்க இங்கு வரும் பயணிகள் ஆவலோடு உள்ளார். இந்த வருடம் நல்ல வருவாய் கிடைக்கும் என விவசாயிகளும் உற்சாகத்துடன் வெள்ளரிக்காய் பயிரிட்டு வருகின்றனர்.