தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சட்டத்தை முறையான முறையில் அமல்படுத்தாத உள்ளாட்சி ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஏஐடியூசி தெரு வியாபாரிகள் சார்பில் தூத்துக்குடியில் மாநில தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் 2014-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் சட்டம் கொண்டு வரப்பட்டு, தமிழ்நாட்டில் 2015-ஆம் ஆண்டு விதிகள் அமலுக்கு வந்தன. இதன்படி அனைத்து வியாபாரத் தளங்களிலும் கணக்கெடுப்பு நடத்தி, தெரு வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வியாபாரச் சான்று வழங்கப்பட வேண்டும். ஆனால் பல உள்ளாட்சி அமைப்புகளில் இச்சட்டம் இதுவரை சரிவர அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி 6 மாதத்திற்குள் இச்சட்டத்தை அமல்படுத்தாத உள்ளாட்சி ஆணையர்கள் மீது உள்ளாட்சி இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மட்டக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது தொழிலாளர் சங்கச் செயலாளர் தனலட்சுமி, தலைவர் பொன்னுசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலாளர் லோகநாதன், மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தெரு வியாபார தொழிலாளர் சங்கம் ஜோசப், பால்பாண்டியன், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கரும்பன், ஏஐடியூசி மாவட்டப் பொருளாளர் பாலசிங்கம், சட்ட ஆலோசகர் கண்ணம்மாள் உள்பட திரளானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


