செய்துங்கநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக சிறுவன் கண்முன் தந்தை நேற்று முன்தினம் இரவு சரிமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கீழ் நாட்டார்குளம் இசக்கியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்லையா மகன் குரு(35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா. இவர்களுக்கு செல்வம்(11), ஆண்டூருஸ்(8), டோனி(5) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்றிரவு குரு, வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது 3 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தகவல் அறிந்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாயஜோஸ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன், எஸ்ஐ ராஜாராம், சதீஷ், ரவிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குருவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் குருவை கொலை செய்ததாக கீழ நாட்டார்குளத்தைச் சேர்ந்த குருநாதன் மகன் செல்லத்துரை (48), முத்தையா மகன்கள் துரை (27), மாசிலாமணி (25) ஆகியோர் அரிவாளுடன் செய்துங்கநல்லூர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:& கொலையான குரு மற்றும் செல்லத்துரை அவரது அண்ணன் மகன்கள் துரை, மாசிலாமணி ஆகியோர் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உறவினர்கள் ஆவர். செல்லத்துரை உள்ளூரில் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். மாசிலாமணி வீடு மற்றும் கடைகளுக்கு வாட்டர்கேன் சப்ளை செய்து வருகிறார். துரை சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
குருவின் மனைவி உஷா குறித்து செல்லத்துரை மற்றும் அவரது அண்ணன் மகன்கள் கடந்த 11.06.2018 அன்று அவதூறாக பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குரு, செல்லத்துரையை கத்தியால் குத்தினார். இது தொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு குரு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அருகில் உள்ள நொச்சிகுளம் சென்று அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆனாலும் சித்தப்பாவை கத்தியால் குத்திய குருவை பழி தீர்க்க துரை, மாசிலாமணி ஆகியோர் திட்டமிட்டு இருந்தனர். இதுதொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே அவ்வப்போது சிறுசிறு மோதல்கள் ஏற்பட்டு வந்தது குரு தரப்பினர் செய்துங்கநல்லூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் செல்லத்துரை தரப்பினரை அழைத்து விசாரித்த போது அவர்கள் பொய் புகார் கொடுப்பதாக தெரிவித்தனர். அதன்பிறகு போலீசார், இரு குடும்பத்தினரையும் அழைத்து எச்சரிக்கை செய்தனர். இந்த முன்விரோதம் காரணமாகவும் குருவை தீர்த்தக்கட்ட செல்லத்துரை தரப்பினர் முடிவு செய்தனர்.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி குரு, கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் கீழ நாட்டார்குளம் வந்துள்ளார். இங்கு வீட்டிற்கு வெள்ளையடித்தல் மற்றும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று நொச்சிகுளம் சென்று விட்டு தனது இளைய மகன் டோனி(5) யுடன் நேற்று முன் தினம் இரவு 9.40 மணியளவில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டு முன் பைக்கை நிறுத்தியதும் இருளில் மறைந்திருந்த செல்லத்துரை உள்ளிட்ட 3 பேரும் சிறுவன் டோனி வாயை பொத்தினர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனது கண்முன் தந்தை குருவை சரிமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தாங்கள் வந்த பைக்கில் தப்பிச் சென்று விட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
சரண் அடைந்த செல்லத்துரை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தையொட்டி அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.