தூத்துக்குடியில், பருவகால மாறுபாடுகளால் நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்க, மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மழைநீரைச் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயருவதோடு, நிலத்தடி நீரின் உவர்ப்புத் தன்மையும் குறைந்து பயன்பாட்டிற்கு ஏதுவானதாக மாறுகிறது. வறட்சி காலங்களில் மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்திற்குப் பயன்படக்கூடிய நீர்நிலைகள் ஏதும் இல்லாத சூழலில், ஒவ்வொரு கட்டடத்திலும் மழைநீரைச் சேகரித்து வைக்கும் அமைப்பை ஏற்படுத்துவது இன்றியமையாததாகிறது.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வீடுகள் மற்றும் கட்டடங்களின் உரிமையாளர்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை உடனடியாக ஏற்படுத்தி, நீர் ஆதாரத்தைப் பெருக்கும் அரசு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மழைநீர் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பொதுமக்கள் தூத்துக்குடி மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவை (Town Planning Section) நேரில் அணுகி விவரங்களைப் பெற்றுச் செயல்படுத்தலாம் என ஆணையர் சி. பிரியங்கா தெரிவித்துள்ளார்.


